அமெரிக்க தேர்தல் முடிவுகள் தங்களிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என ரஷியா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த நாட்டு வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மரியா ஜகரோவா கூறுகையில், ‘அடுத்த அமெரிக்க அதிபர், அவர் யாராக இருந்தாலும், சொந்த நாட்டின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்துவதும், அமெரிக்க கடற்கரையிலிருந்து பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் சாகசங்களைத் தேடாமல் இருப்பதும் தர்க்கரீதியானதாக இருக்கும். அமெரிக்கக் கொள்கையில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டாலும், எங்களுக்கு ஏதேனும் முன்மொழிவுகள் தோன்றினாலும், ரஷியாவின் நலன்களுடன் பொருந்தக்கூடிய வகையில் அவற்றை ஆய்வு செய்ய நாங்கள் தயாராக இருப்போம். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குறிப்பாக தேசிய பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் ரஷியா தனது நலன்களை உறுதியாக பாதுகாக்கும். ஜனநாயக நெருக்கடி மற்றும் சமூகத்தின் பிளவு ஆகியவற்றை அமெரிக்கா கடந்து வர வாழ்த்துகிறேன்’ என்று அவர் கூறினார். இதுதொடர்பாக ரஷியாவின் அரசு செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் கூறுகையில், “அமெரிக்காவுடனான உறவு மிகுந்த தொய்வு நிலையில் இருந்தாலும் அதனுடன் சுமுக உறவை மேற்கொள்வதற்கான பேச்சுவார்தையை நடத்த ரஷியா தயாராகவே உள்ளது. ஆனால், அதற்கு முன்பாக அனைத்தையும் கவனமாக கண்காணித்து ஆராய்வோம். ஜனவரியில் டிரம்ப் அதிபராக வெள்ளை மாளிகைக்கு திரும்பும்போது என்ன நிகழ்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்று அவர் கூறினார்.
டிரம்ப் வெற்றி குறித்து அதிருப்தி தெரிவித்த ஹாலிவுட் பிரபலங்கள்
அமெரிக்க தேர்தலில் கமலா ஹாரிஸ் தோல்வி அடைந்துள்ள நிலையில், அவரை ஆதரித்த பிரபலங்கள் பலர், டிரம்ப் வெற்றி பெற்றது குறித்து தங்கள் அதிருப்தியை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஆஸ்கார் விருது வென்ற அமெரிக்க பாடகி பில்லி ஐலிஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இது பெண்கள் மீதான போர்” என்று பதிவிட்டுள்ளார். இவர் கமலா ஹாரிசுக்கு தனது வெளிப்படையான ஆதரவை தெரிவித்து வந்தார். கடந்த வாரம் நடைபெற்ற ஒரு இசை நிகழ்ச்சியின்போது, தனது ரசிகர்களிடம் “கமலா ஹாரிசுக்கு வாக்கு செலுத்துங்கள்” என்று பில்லி ஐலிஷ் கேட்டுக் கொண்டார். இதே போல் கமலாவுக்கு ஆதரவு தெரிவித்து வந்த மற்றொரு ஹாலிவுட் பிரபலமான மூத்த நடிகை ஜேம் லீ கர்டிஸ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தேர்தல் முடிவுகள் வந்துவிட்டன. பலர் தங்கள் வெற்றியை கொண்டாடிக்கொண்டு இருப்பார்கள். பலர் திகைத்துப் போய் சோகமாக இருப்பார்கள். அமெரிக்காவும், ஜனநாயகமும் எப்போதும் இப்படித்தான் இருக்கும். ஆனால் இந்த தேர்தல் முடிவின் அர்த்தம் என்ன? கொடூரமான, கட்டுப்பாடு மிகுந்த காலம் திரும்பி வருகிறது. தங்கள் உரிமைகள் மறுக்கப்படும் என்று சிறுபான்மையினரும், பெண்களும், ஓரினச் சேர்க்கையாளர்களும் அஞ்சுகின்றனர். நாம் தொடர்ந்து போராடுவோம். அதுதான் அமெரிக்கர்களின் அடையாளம். உண்மையான அமெரிக்கராக இருங்கள்” என்று பதிவிட்டுள்ள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ராப் பாடகியும், கமலா ஹாரிசின் தீவிர ஆதரவாளருமான கார்டி பி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நான் உங்கள் அனைவரையும் வெறுக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். கமலா ஹாரிசை எதிர்த்து போட்டியிட்ட டொனால்டு டிரம்பை பாடகி கார்டி பி தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வந்தார்.