மொன்றியாலில் நடைபெற்ற தனது கவிதைத் தொகுதி அறிமுக விழாவில் கவிஞர் ‘ஆரணி’ புகழாரம்
நான் கனடாவிற்கு வருகை தந்து கடந்த இரண்டு மாத காலமாக இங்கு தங்கியிருந்து பல விழாக்களிலும் கலை இலக்கிய கூட்டங்களிலும் திருமணங்கள் மற்றும் அஞ்சலி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகையில் நான் அவதானித்த விடங்களில் முக்கியமாக, கனடா வாழ் தமிழ் மக்கள் தங்கள் வாழ்க்கையிலும் சடங்குகளையும் நடத்துவதிலும் மிகுந்த வெளிப்படைத் தன்மையைக் கடைப்பிடிப்பதைக் கண்டு நான் வியந்து பாராட்டுகின்றேன். மேலும் அவர்கள் கனடாவில் தமிழர் வாழ்வியல் பழந்தமிழர்வாழ்வியலை பாதுகாக்கும் பிரயத்தனத்தைக் காணமுடிகிறது.
எமது வாழ்க்கைமுறைச்சடங்குகளை, விழாக்களை நடத்துகிற பாங்கு மெய்சிலிர்க்கவைக்கிறது. ஒரு மரணச்சடங்கினைக்கூட அந்தச்சடங்கின் தார்ப்பரியம் பேணி ஒரு சீராக நடத்துகின்ற விதம் மற்றும் எதிர்காலக்கனடியத்தமிழ் சமூகத்திற்கு தமிழர் வாழ்வியலையும் அதன் சிறப்புகளையும் கடத்துமுகமாக அவர்களுக்கு கலைத்துறை, இலக்கியத்துறைகளில் ஈடுபடுத்தும் முயற்சிகளும்
பாராட்டுக்குரியன.அத்துடன் இங்கு நடைபெறும் தமிழர் விழாக்களில் தமிழ் நுண்கலைகளுக்கு கொடுக்கின்ற முக்கியத்துவம் போன்றவற்றை நான் கண்டு ரசித்து அந்த இளைங்கலைஞர்களையும் பல தடவைகள் பாராட்டியுள்ளேன்.
மேலும் சில இலட்சம் சனத்தொகையினராகவும் புலம்பெயர்ந்து வாழும் ஒரு புதியவர்களாக விளங்கும் ஈழத்தமிழ்ச்சமுகம் தமக்கிடையே வாழுகின்ற தமிழ்வல்லோரை தரமறிந்து பாராட்டி அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளரென காலத்தே செய்யப்பெறும் நன்றிக் கடனாக விருதுவழ்ங்கிக்கௌரவிப்பதையும் கண்டு பெருமைகொள்கிறேன்.
மேலும் இங்குள்ள தமிழ்ப் பெற்றோரும் ஏனையோரும் தங்கள் பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் தமிழ் மொழிக் கல்வியிலும் நுண்கலைகளிலும் அவற்றைக் கற்பதிலும் பங்குபற்றுவதிலும் ஆர்வங்கொள்ளச் செய்வதையும் நான் நேரடியாகக் கண்டு வியந்துள்ளேன். எனவே இந்த உயரிய அர்ப்பணிப்பின் காரணமாக கனடாவில் மெதுவாகவும் நேர்த்தியாகவும் தமிழ் வளர்கின்றது என்பதையும் நான் நன்கு உணர்கின்றேன்’
இவ்வாறு, தற்போது கனடாவிற்கு வருகை தந்துள்ள யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபரும் எழுத்தாளரும் கவிஞருமான ‘ஆரணி’ அவர்களின் ‘நினைவிடைத் தோய்தல்’ என்னும் கவிதைத் தொகுதியின் அறிமுக விழா மொன்றியால் அருள்மிகு திருமுருகன் ஆலய மண்டபத்தில் கடந்த 9ம் திகதி சனிழக்கிழமையன்று நடைபெற்றபோது அதில் நன்றி தெரிவித்து பதிலுரையாற்றிய நூலாசிரியர் புகழாரம் சூட்டினார்
அத்தடன் இந்த மொன்றியால் அறிமுகவிழாவில் ரொறன்ரோ நகரிலிருந்து வந்துள்ள குழுவில் அங்கம் வகித்த அனைத்து வர்த்தக மற்றும் கலை இலக்கிய நண்பர்களுக்கும் விசேடமாக நன்றி தெரிவித்தார்.
மேற்படி கவிதை நூல் அறிமுகவிழாவிற்கு எழுத்தாளர் வீணைமைந்தன் சண்முகராஜா அவர்கள் தலைமை தாங்கினார். ஆசியுரையை மொன்றியல் அருள் மிகு திருமுருகன் ஆலயத்தின் பிரதம குரு சிவஶ்ரீ வெங்கடேஸ்வரக் குருக்கள் ஆற்றினார். வாழ்த்துரைகளை திருமதி வதனி ஶ்ரீஸ்கந்தராஜா மற்றும் திரு உதயகுமார் ஆகியோர் வாழ்த்துரைகளை வாழ்த்துரைகளை ஆற்றினார்கள். நட்புரை வாகீசன் நடராஜா அவர்கள் நிகழ்த்தினார். நூல் பற்றிய ஆய்வுரையை திருமதி இளவரசி இளங்கோவன் நிறைவான ஒரு உரையாக வழங்கினார். மூர்த்தி செல்லையா அவர்கள் நூல் அறிமுகவுரையை ஆற்றினார். நூலாசிரியர் பற்றிய அறிமுகத்தை உதயன் பத்திரிகை ஆர். என். லோகேந்திரலிங்கம் நிகழ்த்தினார். தொடர்ந்து விழாக்குழு சார்பில் நூலாசிரியர் யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபரும் எழுத்தாளரும் கவிஞருமான ‘ஆரணி’ அவர்கள் கௌரவிக்கப்பெற்றார்.
தொடர்ந்து அங்கு வருகை தந்திருந்த வர்த்தகப் பிரமுகர் மற்றும் கலை இலக்கிய மற்றும் சமூகப் பணியாற்றும் நண்பர்கள் என பலருக்கு நூல் பிரதிகள் வழங்கப்பெற்றன.