பு.கஜிந்தன்
இலங்கையில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் அரசுக் கட்சி சார்பாகப் போட்டியிடுகின்ற எந்த ஒரு வேட்பாளருக்கும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பிரித்தானியக் கிளை ஆதரவளிக்க மாட்டாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் இலண்டன் கிளையின் தலைவர் சொக்கநாதன் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
11ம் திகதி அன்றையதினம் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
நீண்ட காலமாக ஈழத் தமிழ் மக்களின் நன்மதிப்பையும், பேராதரவையும் பெற்றிருந்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி இப்போது அதன் மத்திய குழு உறுப்பினர்களின் குழுவாக செயற்பாடுகளாலும், ஜனநாயக விரோத செயற்பாடுகளினாலும் கட்சிக்குள்ளே விரிசல்களை ஏற்படுத்தி உடைவுகளை ஏற்படுத்தியுள்ளமை கட்சியின் கீழ்மட்ட உறுப்பினர்கள் மத்தியிலும், ஆதரவாளர்கள் மத்தியிலும், தமிழ் மக்கள் மத்தியிலும் பெரும் அதிருப்தியையும், விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கட்சிக்குள்ளே எதேச்ச அதிகார செயற்பாடுகள் தலைதூக்கியுள்ள் இநிலையில் கட்சியின் நீண்ட கால உறுப்பினர்கள் கட்சியை விட்டு விலகிச் சென்றுள்ளனர். அத்தோடு பலர் கட்சி செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கியுள்ளனர். ஒதுக்கப்பட்டுள்ளனர். அது மாத்திரமன்றி கட்சியின் நீண்ட கால மூத்த உறுப்பினர்கள் பலர் சுயேட்சையாக அல்லது வேறு கட்சிகளிலும் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றமை என்பது கட்சிக்கு பெருத்த அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது.
தந்தை செல்வா அவர்களினால் கட்டமைப்புச் செய்யப்பட்ட தமிழ் அரசுக் கட்சியை அதனுடைய தற்போதைய தலைவர்களே சீரழித்துக் கொண்டிருப்பது கட்சியின் எதிர்காலத்தை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. இத்தகைய செயற்பாடுகள் தொடருமேயானால் தமிழ் அரசுக் கட்சியை தொடர்ந்து பாதுகாப்பதோ, வளர்த்துச் செல்வதோ இயலாமல் போய்விடும்.
ஆகவே தமிழரசு கட்சியை அதன் வீழ்ச்சியிலிருந்து அதன் சீரழிவில் இருந்து பாதுகாப்பது தமிழரசு கட்சியின் ஒவ்வொரு உறுப்பினருடைய கடமையும் ஆகும்.
இந்நிலையில் தற்போது தமிழ் அரசுக் கட்சியின் செயற்பாடுகளை தமது சொந்த விருப்புக்கு ஏற்ப நடத்திச் செல்லும் திரு ஆ.சுமந்திரன் திரு இ.சாணக்கியன் திரு ப.சத்தியலிங்கம் சத்தியலிங்கம் ஆகியுடன் இணைந்து கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மற்றும் தன்னிச்சையான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் மீதான ஒழுக்காற்று நடவடிக்கையை பாரபட்சமின்றி கட்சி மேற்கொள்ள வேண்டும்.
இல்லையேல் தமிழ் அரசுக் கட்சியினால் தமிழ் மக்கள் மத்தியிலிருந்து இழந்து போன பேராதரவை மீளப் பெறமுடியாது. கட்சியை தொடர்ந்தும் வளர்த்துச் செல்லவோ, தமிழ் மக்களின் அரசியல் முன்னெடுப்பை கட்சி மேற்கொள்வோ முடியாத துப்பாக்கிய நிலையே தோன்றும்.
எனவே தமிழ் அரசுக் கட்சிக்குள் ஒழுக்காற்று நடவடிக்கைகளும் சீர்திருத்தங்களும் மேற்கொள்ளப்படும் வரைக்கும் தற்போது எதைச் அதிகாரப் போக்கில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ள தமிழரசு கட்சியின் வேட்பாளர்களுக்கு இலங்கைதமிழ் அரசுக் கட்சியின் பிரித்தானிய கிளை எந்தவித ஆதரவையும் வழங்க மாட்டாது என்பதை தாழ்மையுடனும் உரிமையுடனும் அறியத் தருகிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.