அவருக்கு உடந்தையாகச் செயற்படும் அமரர் அ. அமிர்தலிங்கத்தின் புதல்வர் இங்கிலாந்து வாழ் அ.பகீரதன்
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் துரை கணேசலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கண்டனம்
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் என்னும் புனிதமான அமைப்பு 1974ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பெற்ற பின்னர் இந்த வருடத்தின் இயக்கத்தின் பொன்விழா ஆண்டாக 2024 திகழ்கின்றது. உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைமையகம் கடந்த பல வருடங்களாக கனடாவில் பதிவு செய்யப்பெற்று உலகெங்கும் பல நாடுகளில் மாநாடுகளை நடத்தியும் தொடர்ச்சியாக தமிழ் மொழி சார்ந்தும் பண்பாடு சார்ந்தும் பல செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. இயக்கத்தின் பெயரும் இலட்சனையும் கனடாவின் மத்திய அரசாங்கத்தில் பதிவு செய்யப்பெற்று அதன் உரிமைத்துவம் கனடாவில் இயங்கிவரும் அதன் இயக்குனர் சபைக்கே உரித்தானவையாக விளங்குகின்றன.
இந்த இயக்கத்தின் செயலாளர் நாயகமான ஜேர்மனி வாழ் துரை கணேசலிங்கம் அவர்களும் தற்போது செயற்பட்டு வருகின்றார். அவரோடு இணைந்து இயக்கத்தின் வளர்ச்சிக்காக முப்பது வருடங்களுக்கு மேலாக உழைத்து வரும் பல அன்பர்கள் உலகின் பல நாடுகளிலிருந்தும் உற்சாகத்துடனும் விசுவாசமாகவும் செயற்பட்டு பக்கதுணையாக இருந்து வருகின்றார்கள்.
ஆனால் கடந்த சில வருடங்களாக எமது உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் பெயரையும் அதன் இலட்சனையையும் தொடர்ச்சியாக சட்ட விரோதச் செயற்பாடுகளுக்கு பயன்படுத்தி வரும் இழிவான செயற்பாடுகளில் சில நாடுகளில் வாழும் மோசடி நபர்கள் சிலர் இணைந்து எவ்வித தயக்கமோ அன்றி கூச்சமோ இன்றி அறிக்கைகளை வெளியிடுவதும் ‘மாநாடுகள்’ என்ற பெயரில் அறிஞர்களையும் பெரியோர்களையும் பொய்யான தகவல்களைத் தெரிவித்து அழைத்து கூடுவதுமாக அவர்களின் சட்ட விரோத செயற்பாடுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இவ்வாறான சட்ட விரோதமான செயற்பாடுகளுக்கு முக்கியமான மோசடி நபராகத் விளங்குபவர் முன்னாள் இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் சகோதரரான ஜேர்மனி வாழ் மாவை தங்கராசா விளங்குகின்றார். இவருக்கு உதவியாக தமிழ்நாடு வாழ் பஞ்ச் இராமலிங்கம் என்பவரும் இன்னும் சிலரும் செயற்படுகின்றார்கள். தற்பொழுது இந்த மோசடி நபர்கள் இருவரும் ஒரு முக்கிய அன்பர் ஒருவரையும் பொய்யான தகவல்களைப் பகிர்ந்து கொண்டு முன்னாள் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அமரர் அ. அமிர்தலிங்கத்தின் புதல்வரும் வைத்திய கலாநிதியுமான இங்கிலாந்து வாழ் அ.பகீரதன் அவர்களையும் இந்த சட்டவிரோதமான செயற்பாடுகளில இணைத்துக் கொண்டு ஆங்காங்கே கூட்டங்களை நடத்தி வருகின்றார்கள்.
இந்த செயற்பாடுகளின் தொடர்ச்சியாக எமது புனிதமான இயக்கத்தின் பெயரையும் இலச்சனையையும் பயன்படுத்தி இந்த மோசடிப் பேர்வழிகள் தாய்லாந்தில் ஒரு ஆய்வரங்கத்தை எதிர்வரும் நவமபர் மாதம் 27ம் 28ம் திகதிகளில் தாய்லாந்து தேசத்தின் பல்கலைக் கழகம் ஒன்றில் நடத்தவுள்ள விளம்பர அறிவித்தல்கள் பல இடங்களுக்கு பகிரப்பட்டுள்ளன. இதன் பிரதி ஒன்று எமது கனடா தலைமை அலுவலகத்திற்கும் கிடைத்த காரணத்தால், இவ்வாறான ஒரு கண்டன அறிக்கையை வெளியிட வேண்டிய அவசியம் எமக்கு ஏற்பட்டுள்ளது.
மேற்படி விளம்பர அறிவித்தல்களில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் இலங்கைத் தலைமையகமே ஏனைய மூன்று அமைப்புக்களுடன் இணைந்து தாய்லாந்து தேசத்தில் நவம்பர் மாதம் ஆய்வரங்கத்தை நடத்துவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எமது உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்திற்கு இலங்கையில் ஒரு கிளை நிறுவப்பெற்று அது சிறப்பாகச் செயற்பட்டு வருவதையும் இந்த இடத்தில் நாம் குறிப்பிட விரும்புகின்றோம்.
எனவே இந்த கண்டன அறிக்கையை வெளியிடுவதன் மூலம் இவ்வாறான தொடர்ச்சியான சட்ட விரோத செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதும் எமது அங்கீகரிக்கப்பெற்ற இயக்கத்தின் கனடாவில் இயங்கும் தலைமையகம் மூலம் மேலும் ஆக்கபூர்வமான பணிகளை தொடர இலகுவாக இருக்கும் என்பதே எமது நோக்கு ஒழிய, சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுப்பது கூட எமது நோக்கமல்ல என்பதையும் நாம் இந்த அறிக்கை மூலம் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இந்த சட்டத்திற்கு முரணான செயற்பாடுகளில் எமது கனடாத் தலைமையகம் வேறு பணிகளைச் செய்யும் முயற்சிகள் பின் தள்ளப்படுகின்றன. எனவே இவ்வாறான பாதகமான செயற்பாடுகளை நிறுத்தும் வகையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனைத்துலகின் தமிழ்ச் சமூகத்தின் பிரதிநிதிகளாக விளங்கும் கல்வியாளர்களும் தமிழ்ப் பண்பாட்டை நேசிப்பவர்களும் புத்திமதிகள் கூறவேண்டும் என்றும் வேண்டிக் கொள்கின்றோம்.
இவ்வாறு. உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் துரை கணேசலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.