சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு ஆலோசனை கூட்டம் தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக உயர் நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டனர். அவற்றில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளைப் புறந்தள்ளி இந்திக்கு விழா எடுப்பது, சிறுபான்மையினர் உரிமைகளைப் பறிக்கும் சட்டங்கள் கொண்டு வருவது, தொடர் ரெயில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்காததது, மாநில அரசுக்கான நிதியை விடுவிக்காதது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மத்திய பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. கடந்த 18 மாதங்களாக மணிப்பூர் மாநிலம் பற்றி எரியும் நிலையில், பிரதமர் மோடி அமைதி காப்பது அம்மாநிலத்தை மத்திய அரசு கைவிட்டதாகவே தெரிகிறது. இவ்விவகாரத்தில் பிரதமர் மோடி தனிக்கவனம் செலுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் பிரசாரத்தை இப்போதே தொடங்க நிர்வாகிகள், தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. துண்டு பிரசுரங்கள், திண்ணைப் பிரசாரங்கள் என மக்கள் இயக்கத்தை தொடங்க வேண்டும். திமுக அரசின் திட்டங்களால பயனடைந்தவர்கள் 2026-ல் திமுக ஆட்சியை மீண்டும் மலர செய்வார்கள். இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள், படகுகளை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய வருவாயில் மாநில அரசுக்கு 50 சதவீத நிதி பகிர்வை அளிக்க வேண்டும். மத்திய- மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் திட்டங்களுக்கு 50 சதவீத நிதியை ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.