ரஷியா-உக்ரைன் போர் 2 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கு நாடுகள் பொருளாதார மற்றும் ராணுவ உதவிகளை வழங்கி வருகின்றன. அதே சமயம் ரஷியா, தொடர்ந்து தனது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், போரில் முதல் முறையாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஐ.சி.பி.எம். ஏவுகணையை ரஷியா பயன்படுத்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உக்ரைன் விமானப்படை வெளியிட்டுள்ள தகவலின்படி, ரஷியாவின் அஸ்திராகான் பகுதியில் இருந்து உக்ரைனின் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள டிரிப்ரோ நகரை குறிவைத்து ஐ.சி.பி.எம். ஏவுகணை ஏவப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுக்கும் வகையில் ரஷியா இவ்வாறு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் என்பவை 5,000 கிலோ மீட்டர்களுக்கும் மேலாக பறக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளாகும். நீண்ட தொலைவுக்கு சென்று தாக்கும் வல்லமை கொண்ட இந்த ஏவுகணை, அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனினும், ரஷியா அணு ஆயுதம் இல்லாத ஏவுகணையை கொண்டே தாக்குதல் நடத்தியுள்ளது. அணு ஆயுதங்களை பயன்படுத்த புதின் ஒப்புதல் அளித்த நிலையில், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை கொண்டு ரஷியா தாக்குதல் நடத்தியிருப்பது பதற்றத்தை அதிகரித்துள்ளது.