‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் பிறகு, கதாநாயகனாக நடித்து ‘லவ் டுடே’ படத்தை இயக்கினார். இப்படமும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ என்ற படத்திலும், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ‘டிராகன்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் டிராகன் படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசை அமைக்கிறார்.
இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் ஏறத்தாழ நிறைவடைந்து இரண்டு படங்களுமே அடுத்தடுத்து திரைக்கு வர தயாராகி வருகின்றன. இதற்கிடையில் பிரதீப் ரங்கநாதன், இயக்குனர் சுதா கொங்கராவின் உதவி இயக்குனர் கீர்த்தி ஈஸ்வரன் என்பவரின் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியானது. தற்போது இது குறித்த கூடுதல் தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது பிரதீப் ரங்கநாதன் நடிக்க உள்ள புதிய படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாக புதிய பதிவேற்றம் வெளியாகி உள்ளது. பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தமிழில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் குட் பேட் அக்லி திரைப்படத்தை தயாரித்து வருகிறது. இதை தொடர்ந்து இரண்டாவதாக பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தை தயாரிக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.