வெண்ணிலா கபடிக்குழு படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான சுசீந்திரன் “நான் மகான் அல்ல, பாண்டிய நாடு, ஜீவா, ஈஸ்வரன்” உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இவரது இயக்கத்தில் இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வை சொல்லும் படமாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ‘2கே லவ் ஸ்டோரி’. இன்றைய இளம் தலைமுறையின் காதல், நட்பு என அவர்களது வாழ்வை பிரதிபலிக்கும் படைப்பாக இந்த படம் உருவாகியுள்ளது. சிட்டி லைட் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.
புதுமுக நாயகன் ஜெகவீர் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடித்துள்ளார். மேலும் பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திருமணத்திற்கு புகைப்படம் எடுக்கும் இளைஞர்கள் குழுவின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, அனைவரும் ரசிக்கும் வகையில் இந்த படத்தின் திரைக்கதை அமைந்துள்ளது. இந்த படத்துக்கு தணிக்கை குழு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் 13-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தநிலையில், தற்போது இந்த படத்தின் ‘விட்டுக்கொடுத்து போடா’ என்ற இரண்டாவது பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை டி.இமான் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த பாடலை ஆதித்யா மற்றும் நிகிதா காந்தி ஆகியோர் பாடியுள்ளனர்.