அதானி என்னை வந்து சந்திக்கவும் இல்லை, நான் அவரைப் பார்க்கவும் இல்லை என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.
தமிழக சட்டசபை கூட்டம் நேற்று காலை தொடங்கியது. கேள்வி நேரம் முடிந்ததும் 2024-25-ம் நிதி ஆண்டில் ஏற்பட்ட கூடுதல் செலவுக்காக சட்டசபையில் ரூ.3 ஆயிரத்து 531 கோடிக்கு துணை பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து மதுரை `டங்ஸ்டன்’ சுரங்க அனுமதியை ரத்து செய்யக்கோரும் தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், தமிழக சட்டசபையின் 2-ம் நாள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
அந்த வகையில், அதானி விவகாரத்தில் அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு தொடர்பு உள்ளதா? என்பதை விளக்க வேண்டும் என பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே மணி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, “தமிழ்நாட்டில் அதானியின் குழுமத்தின் தொழில் முதலீடுகள் குறித்து பொதுவெளியில் வரும் தவறான புகார்கள் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து இரண்டு மூன்று முறை விளக்கியுள்ளார். அதற்கு பிறகும் இது குறித்து செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் தான் உள்ளன. அதானி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும், அந்த விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் முழக்கம் எழுப்பி வருகின்றன. பாஜகவோ, பாமகவோ இதை ஆதரித்துப் பேச தயாராக உள்ளதா? தமிழ்நாட்டிற்கும் இதற்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. என்னை அதானி சந்திக்கவும் இல்லை, நான் அவரை பார்க்கவும் இல்லை. இதைவிட விளக்கம் தேவையா?” இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.