கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை எரிப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், மன்னாரில் தனியான ஒரு இடத்தில் அடக்கம் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை, நல்லடக்கம் செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவது பற்றி அமைச்சரவையில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதற்கான வர்த்தமான அறிவித்தல் நாளைமறுதினம் நள்ளிரவில் வெளியிடலாம் எனவும் தெரியவருகிறது.
இதேவேளை,சுகாதார அமைச்சின் தொழில்நுட்பக் குழு, நாளை கூடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கூடிய அமைச்சரவையில், கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை நல்லடக்கம் செய்யலாமென்ற வர்த்தமானியை வெளியிடப்படும் என்று சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராட்சி அறிவித்துள்ளாரென கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, நாட்டில் எந்தவொரு பிரதேசத்திலும் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை, மன்னாரில் ஒரே இடத்தில் நல்லடக்கம் செய்வது குறித்தும் ஆராயப்பட்டதாக அறியமுடிகின்றது.
அதற்காக மன்னார் மாவட்டத்தில் ஒரு உலர் இடத்தை தெரிவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.