ஈரோட்டில் விரைவில் ஐடி பார்க் அமைக்கப்பட உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தின் அனைத்து துறைகள் சார்பில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் திறப்பு விழா, புதிய திட்டப்பணிகள் தொடக்கவிழா, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஈரோடு சோலாரில் உள்ள புதிய பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு 50 ஆயிரத்து 88 பேருக்கு ரூ.284 கோடியே 2 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் ஈரோடு மாவட்டத்தில் ரூ.951 கோடியே 20 லட்சம் மதிப்பில் முடிவுற்ற 559 திட்ட பணிகளை தொடங்கி வைத்ததுடன், ரூ.133 கோடியே 66 லட்சம் மதிப்பில் 222 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேடையில் பேசியதாவது, “தமிழ்நாட்டில் புதிய வரலாற்றிற்கான தொடக்கம் ஈரோடு. காரணம் பெரியாரை தந்த மண் இந்த ஈரோடு.
பெரியார் நிகழ்த்தி காட்டிய வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவை கேரளாவில் சிறப்பாக நடத்திக்காட்டினோம். திராவிட மாடல் ஆட்சியை கேரள மக்கள் பாராட்டி வருகின்றனர். அதற்கு ஈரோட்டின் மண்ணின் மைந்தன் பெரியார் தான் காரணம். பெரியார், அண்ணா, மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி இல்லாவிட்டால் திராவிட இயக்கமே இல்லை. அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் மூலம் ஈரோட்டில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் கிடைக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் ஐடி பார்க் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும். ஈரோடு மாநகராட்சி அந்தியூர், கோபி, முடக்குறிச்சி சாலைகள் ரூ.100 கோடியில் மேம்படுத்தப்படும். சத்தியமங்கலம், நம்பியூர், பவானிசாகர் கூட்டுக் குடிநீர் திட்டங்கள் ரூ.12 கோடியில் மேம்படுத்தப்படும். வாடகை கட்டிடத்தில் இயங்கும் துணை சுகாதார நிலையங்களுக்கு சொந்த கட்டிடங்கள் கட்டித் தரப்படும். உயர்கல்வித்துறையின் சிக்கநாயக்கர் கல்லூரியில் ரூ.10.75 கோடி மதிப்பில் விளையாட்டு மைதானம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்படும். சென்னிமலை உள்ளிட்ட 50 கிராமங்களில் ரூ.15 கோடி செலவில் கூட்டுக் குடிநீர் திட்டம் மேம்படுத்தப்படும். திருப்பூர் குமரன் நினைவை போற்றும் வகையில் சென்னிமலையில் அவரது நினைவு மண்டபம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும்.
வெறும் அறிவிப்புகளை மட்டுமே வெளியிடும் அரசு இது கிடையாது. பெண்களின் பொருளாதார விடுதலைக்காக மகளிர் உரிமைத் தொகை செயல்படுத்தபடுகிறது. மக்களைத் தேடி மருத்துவம், விவசாயிகளுக்கான பயிர்க்கடன், வங்கிக் கடன் மூலம் பலர் பயனடைந்துள்ளனர். ஃபெஞ்சல் புயல் நிவாரணப் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறோம். திமுக அரசை மக்கள் பாராட்டி வருகின்றனர்” இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.