இயக்குனர் மிஷ்கின் “சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, துப்பறிவாளன்” போன்ற வெற்றி படங்களை இயக்கியுள்ளார். ‘நத்தலால’ என்ற படத்தை இயக்கியது மட்டுமல்லாமல் அதில் அவரே கதாநாயகனாக நடித்துள்ளார். வெற்றி, தோல்வியை கடந்து மிஷ்கின் படத்தில் எப்போதும் ஒரு தனித்துவம் உள்ளதால் இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளனர். உதயநிதி ஸ்டாலினை வைத்து ‘சைக்கோ’ படத்தை இயக்கினார்.
பின்னர் பிசாசு 2 படத்தை இயக்கினார். ‘சவரக்கத்தி, நந்தலாலா, மாவீரன், லியோ’ போன்ற சில படங்களில் மிஷ்கின் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தற்போது விஜய் சேதுபதியை வைத்து ‘டிரெய்ன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். பாலா திரையுலகுக்கு வந்து 25 வருடங்கள் நிறைவடைந்ததையொட்டி பாலா 25 விழாவும் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேசிய மிஷ்கின் நான் கீழே விழுந்தபோது பிசாசு படம் மூலம் கைகொடுத்தவர் பாலா என தெரிவித்துள்ளார். இயக்குனர் மிஷ்கின் பேசுகையில், “நான் இயக்கிய ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படம் பெரிதாக போகவில்லை ஆனால் அந்த படம் பார்த்துவிட்டு என்னை அழைத்தார். அதன் பிறகு அவரைப் பார்த்தோம். அப்போது பாலா என்னை பார்த்து எனக்கு படம் பண்றியா டா என்று கேட்டார். அப்படி பண்ணிய படம்தான் பிசாசு. நான் கீழே விழுந்திருந்த நேரத்தில் என் கையைப் பிடித்து ஒரு படத்தை கொடுத்தார் பாலா. என் வாழ்க்கை முழுவதும் பாலாவிற்கு கடமைப்பட்டிருக்கின்றேன். 100 வருடத்திற்குள் அனைவரும் இறந்து விடுவார்கள் ஆனால் இளையராஜா, பாலா போன்றவர்கள் இறக்கமாட்டார்கள் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து கொண்டே இருப்பார்கள். ” என்று நெகிழ்வாக பேசினார்.