நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்களின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
“இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த நவம்பர் 25ம் தேதி தொடங்கி, நேற்றைய தினம் முடிவுற்றுள்ளது. இக்கூட்டத் தொடரில் வீறுகொண்ட வீரர்களாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடளுமன்ற உறுப்பினர்கள் முழங்கி இருக்கிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகளைப் பார்த்து நாடே வியந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் நலனுக்காக குரல் கொடுப்பது – மாநில உரிமைகள் தொடர்பான பிரச்னைகளை எழுப்பி அவையின் கவனத்தை ஈர்ப்பது ஆகிய இரண்டையும் வெற்றிகரமாகச் செய்து காட்டி இருக்கிறார்கள். மற்ற மாநில எம்.பி.க்களுக்கு முன்னோடிகளாக திமுக எம்.பி.க்கள் செயல்படுவதைப் பார்த்து நான் மகிழ்கிறேன். நாட்டை உலுக்கும் முக்கியப் பிரச்னைகளில் திமுகவின் நிலைப்பாடு என்ன என்பதை இன்று நாடே உன்னிப்பாக கவனிக்கும் நிலைக்கு இந்த திராவிடப் பேரியக்கம் வளர்ந்திருப்பதை நினைத்தும் பெருமையாக இருக்கிறது. அவையை நடத்த விரும்புவதை விட- அவையை முடக்க வேண்டும், அரசின் தோல்விகள் குறித்த எந்த விவாதமும் நடைபெற்று விடக்கூடாது என்பதையே மனதில் வைத்து பாஜக எம்.பி.க்கள் செயல்பட்டதை நாம் காணமுடிந்தது. குளிர்காலக் கூட்டத் தொடர் குறித்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், மக்களவையானது 54.5 விழுக்காடும், மாநிலங்களவை 40 விழுக்காடும்தான் ஆக்கபூர்வமாகச் செயல்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
“ஒரே நாடு ஒரே தேர்தலை” கடுமையாக எதிர்த்துப் பேசிய திமுக மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு – “மதுரை டங்ஸ்டன் கனிம சுரங்க அனுமதியை ரத்து செய்யுங்கள்” என்றும் “பேரிடர் மேலாண்மை 2024 திருத்தச் சட்டத்தை எதிர்த்தும்” அனல் பறக்கப் பேசிய திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி – “அவைக்குப் பிரதமரே வருவதில்லை” என்று முழங்கிய திருச்சி சிவா – அரசியல் சட்டத்தின் 75 ஆவது ஆண்டில், “அரசியலமைப்புச் சட்டத்தின் ஆறு கட்டமைப்புக் கூறுகளும் – கேசவானந்த பாரதி வழக்கும்” என அரசியல்சட்ட நுணுக்கம் நிறைந்த ஆ.ராசா – மாநில உரிமைகளைப் பற்றியும், மதவாத அரசியல் அச்சுறுத்தல் குறித்தும் உரையாற்றிய ஜெகத்ரட்சகன் – “வானிலை அறிவிப்பு தொழில்நுட்பத்தை மேம்படுத்துக” என தயாநிதி மாறன் – என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் மத்திய அரசைத் தட்டி எழுப்பினார்கள். ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் குரலாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டிய பிரச்னைகள் – எழுப்பிய மாநில உரிமை முழக்கங்கள் – ஜனநாயகத்தைப் பாழ்படுத்தும் “ஒரே நாடு ஒரே தேர்தலை” ஆணித்தரமாக எதிர்த்த நாடாளுமன்றக் குரல்கள் எல்லாம் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் செவிகளில் உரக்கவே விழுந்திருக்கும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது. அதன் மூலம் மத்திய அரசு தொடர்ந்து தமிழ்நாட்டை – தமிழ்நாட்டு மக்களை ஓரவஞ்சனையுடன், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்த முடியாது என்ற செய்தியை அழுத்தம் திருத்தமாகக் கொண்டுபோய்ச் சேர்த்திருக்கிறார்கள் நமது எம்.பி.க்கள். இனியும் மத்திய அரசு தமிழ்நாட்டின் உரிமைகளைத் தரவில்லையென்றால் – தமிழ்நாட்டு மக்கள் உரிய நேரத்தில் மீண்டும் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்பது உறுதி”. இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.