`உறுமீன்’, `பயணிகள் கவனிக்கவும்’ போன்ற திரைப்படங்களின் இயக்குனரான எஸ்.பி. சக்திவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் `அலங்கு’. இத்திரைப்படத்தில் கதாநாயகனாக குணாநிதி நடித்துள்ளார். மேலும் மலையாள நடிகர் செம்பன் வினோத் ஜோஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் நாய் ஒன்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.
சங்கமித்ரா சவுமியா அன்புமணி, டிஜி பிலிம் கம்பெனி நிறுவனத்துடன் இணைந்து இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார். புலம்பெயர்ந்து தொழில் செய்யும் பழங்குடியினரின் வாழ்க்கையை பதிவு செய்யும் ‘அலங்கு’ திரைப்படமானது, தமிழக – கேரள எல்லைப்பகுதியில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஆக்சன் – திரில்லர் படமாக உருவாகியிருக்கிறது. இப்படம் வருகின்ற 27-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் ‘அலங்கு’ படத்தை பார்த்த பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், படத்தை பாராட்டி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “அலங்கு படம் ஒரு அதிர்ச்சியூட்டும் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு மனிதனின் நாயின் மீதான காதல் பற்றிய ஒரு பழமையான மற்றும் கிராமிய ஆக்சன் திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப ரீதியாக சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது மற்றும் ஒட்டுமொத்த நடிகர்களின் நடிப்பு சிறப்பாக உள்ளது. இயக்குனர் எஸ்.பி. சக்திவேல் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் வாழ்த்துகள். பாக்ஸ் ஆபிஸில் பெரிய வெற்றி பெற வாழ்த்துகள்” என்று அதில் தெரிவித்துள்ளார்.