ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்ப்பின் மேல்முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், 10-ந்தேதி தண்டனை விவரம் வெளியிடப்பட உள்ளது.
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப். இந்நிலையில், கடந்த நவம்பர் 5-ந்தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிந்தது. இதில், பெரும்பான்மையான இடங்களை முன்னாள் அதிபர் டிரம்ப் சார்ந்த குடியரசு கட்சி கைப்பற்றியது. டிரம்ப் வெற்றி பெற்று, வருகிற 20-ந்தேதி அடுத்த அதிபராக பதவியேற்க இருக்கிறார். டிரம்ப், 2017-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை அமெரிக்க அதிபராக பணியாற்றினார். இதனிடையே, டிரம்ப் தன்னுடன் பாலியல் உறவு கொண்டதாக அமெரிக்காவை சேர்ந்த ஆபாச பட நடிகையான ஸ்டோமி டேனியல்ஸ் பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். 2006-ம் ஆண்டு ஜூலை மாதம் டொனால்டு டிரம்ப் ஓட்டலில் வைத்து தன்னுடன் பாலியல் உறவு கொண்டதாக ஸ்டோமி டேனியல்ஸ் தெரிவித்தார். ஆனால், இந்த குற்றச்சாட்டை டிரம்ப் மறுத்துள்ளார்.
அதேவேளை, 2016-ம் ஆண்டில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு, தன்னுடனான பாலியல் உறவு விவகாரம் பற்றி வெளியே கூறிவிடக்கூடாது என்பதற்காக டிரம்ப் தனக்கு பணம் கொடுத்ததாகவும் ஸ்டோமி டேனியல்ஸ் தெரிவித்தார். டொனால்டு டிரம்பிற்கு எதிராக பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. இதில், பணமோசடி உள்பட 34 பிரிவுகளில் டொனால்டு டிரம்ப் குற்றவாளி என மேன்ஹாட்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் இந்த வாரம் தண்டனை அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு அறிவிப்பை தள்ளி வைக்கும்படி கோரி, டிரம்ப் சார்பில் நியூயார்க் நீதிமன்றம் ஒன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது. எனினும், டிரம்ப்பின் இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. வருகிற வெள்ளி கிழமை தண்டனை விவரம் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.