கர்நாடகாவை நக்சலைட்டுகள் இல்லா மாநிலம் என அறிவிப்பதில் அரசு மகிழ்ச்சி கொள்கிறது என துணை முதல்-அமைச்சர் டி.கே. சிவக்குமார் கூறியுள்ளார்.
கர்நாடகாவில் பல்வேறு மாநிலங்கள் உள்பட பல பகுதிகளை சேர்ந்த 6 நக்சலைட்டுகள் அரசிடம் சரணடைந்தனர். முதல்-அமைச்சர் சித்தராமையா, துணை முதல்-அமைச்சர் டி.கே. சிவக்குமார், உள்துறை அமைச்சர் ஜி. பரமேஷ்வரா மற்றும் மூத்த காவல் அதிகாரிகள் முன்னிலையில் அவர்கள் சரணடைந்தனர். இதன்படி, கேரளாவில் இருந்து ஜிஷ், தமிழகத்தில் இருந்து வசந்த் கே., கர்நாடகாவின் சிக்கமகளூரு பகுதியில் இருந்து லதா மற்றும் வனஜாக்ஷி, தட்சிண கன்னடா பகுதியில் இருந்து சுந்தரி மற்றும் ராய்ச்சூர் பகுதியில் இருந்து மரப்பா அரோலி ஆகிய 6 பேர் அவர்களுடைய சீருடைகளை ஒப்படைத்து விட்டு, சரணடைவதற்கான கடிதம் ஒன்றையும் வழங்கினர். இவர்களின் முடிவை முதல்-மந்திரி சித்தராமையா வரவேற்றார். இதுபற்றி துணை முதல்-அமைச்சர் டி.கே. சிவக்குமார் கூறும்போது, கர்நாடகாவை நக்சலைட்டுகள் இல்லா மாநிலம் என அறிவிப்பதில் அரசு மகிழ்ச்சி கொள்கிறது. எங்களுடைய அரசு, காவல்துறை அதிகாரிகளின் மற்றும் நக்சலைட்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மற்றும் அவர்களுக்கான புனரமைப்பு பணிகளுக்காக அரசு அமைத்துள்ள குழு ஆகியவற்றின் தனித்துவ முயற்சிகளை நினைத்து பார்க்கிறேன்.
6 நக்சலைட்டுகள் சரணடைந்துள்ளனர். அவர்களின் வேண்டுகோள்களையும் நாம் மதிக்க வேண்டும் என கூறியுள்ளார். அவர்களுக்கு முதல்-அமைச்சர் சித்தராமையா, அரசியலமைப்பு புத்தகம் ஒன்றை வழங்கியுள்ளார் என்றும் அவர் கூறினார்.