பாடகர் ஜெயச்சந்திரன் மறைவிற்கு நடிகர் கமல் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் (80) உடல்நலக்குறைவால் கேரளாவின் திருச்சூரில் நேற்று காலமானார். தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 15,000க்கும் மேற்பட்ட பாடல்களை ஜெயச்சந்திரன் பாடியுள்ளார். இவர் இந்திய தேசிய திரைப்பட விருதை ஒருமுறையும், தமிழக அரசின் மாநில திரைப்பட விருதை இரண்டு முறையும், கேரள மாநில திரைப்பட விருதை ஐந்து முறையும் பெற்றுள்ளார். 1997ம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர். தமிழில் புதுமைப் பெண், வைதேகி காத்திருந்தாள், சம்சாரம் அது மின்சாரம், அம்மன் கோவில் கிழக்காலே, கிழக்குச் சீமையிலே, பூவே உனக்காக, சுந்தரா டிராவல்ஸ், கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளிட்ட பல்வேறு படங்களில் பாடியுள்ளார். அவரது மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் மறைவிற்கு நடிகர் கமல் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மலையாளத்திலிருந்து வந்து தெற்கு மாநிலங்களை நிரப்பிய மணிக்குரலுக்கு சொந்தக்காரரான ஜெயச்சந்திரன் மறைந்துவிட்டார் எனும் செய்தி மனதை வருத்துகிறது. அவர் பாடிய பாடல்களில் எல்லாம் வெற்றி கண்டு காட்டியவர். அவர் இசையாக என்றும் நம் மனங்களில் இருப்பார். அவருக்கு என் அஞ்சலி” என்று குறிப்பிட்டுள்ளார்.