ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடாது என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரணம் அடைந்தார். இதையடுத்து, அந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நேற்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய வருகிற 17-ம் தேதி கடைசி நாளாகும். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க. போட்டியிடுமா? அல்லது தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் போட்டியிடுமா? என்பது குறித்து குழப்பமான சூழ்நிலை நிலவி வந்தது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் வி.சி.சந்திரகுமார் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிப்பதாகவும், இந்த தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடாது என்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தி.மு.க.வினர் ஆட்சி, அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவார்கள் என்பதாலும், தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது என்பதாலும் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.