அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் அமைந்துள்ளது. அந்த நகரின் மத்தியில் ஹாலிவுட் பகுதி உள்ளது. அங்கு முன்னணி திரைப்பட நிறுவனங்கள், அவற்றின் திரைப்பட நகரங்கள் அமைந்துள்ளன. இதன்காரணமாக ஹாலிவுட் திரையுலகின் தலைநகராக லாஸ் ஏஞ்சல்ஸ் விளங்குகிறது.
கடந்த 7-ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸின் பாலிசேட்ஸ் பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டது. மலைப்பகுதிகள், எளிதில் தீப்பற்றி எரியும் பைன் மரங்களால் காட்டுத் தீ அதிவேகமாக பரவியது. தற்போது பாலிசேட்ஸ், ஈட்டன், ஹர்ஸ்ட், லிடியா ஆகிய பகுதிகளில் கட்டுக்கடங்காமல் தீ பரவி வருகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சுமார் ஒரு கோடி பேர் வசிக்கின்றனர்.இதில் காட்டுத் தீ பரவும் பகுதிகளில் இருந்து சுமார் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டு உள்ளனர். காட்டுத் தீயில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் பலத்த தீக்காயம் அடைந்துள்ளனர்.
லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீயால் அமெரிக்காவுக்கு சுமார் ரூ.1.29 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்படலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பிரபல தனியார் வானிலை நிறுவனம் இந்த மதிப்பீட்டை வெளியிட்டுள்ளது. எனினும், அமெரிக்க அரசு அதிகாரிகள் இது குறித்து எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை.