போரினால் பாதிக்கப்பட்ட வன்னியில் உள்ள விமானப்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரோஹிங்கியா போர் அனாதைகள் பலவந்தமாக வெளியேற்றப்படமாட்டார்கள் என ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் உறுதியளித்துள்ளதாக, அதுத் தொடர்பில் கொழும்பில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்து மனுவொன்றையும் சமர்ப்பித்த, போராட்டத்திற்கு தலைமை வகித்த, காணாமல் ஆக்கப்பட்டோர் விசாரணைக் குழு தெரிவிக்கின்றது.
“அவர்கள் மியன்மாருக்கு திருப்பி அனுப்பப்படமாட்டார்கள் என்ற யோசனையை அரசாங்கம் எடுத்துள்ளது என்பதை அவர் ஏற்றுக்கொண்டார். ஆனால் அவர்களை சுதந்திரமான சூழலில் வைக்குமாறு கோரிக்கைகளை முன்வைத்தோம். நாங்கள் பேச்சு நடத்துகிறோம் எனக் கூறினார்கள், ஒரு சுதந்திரமான சூழலில் அவர்களை வைக்க வேண்டும் என்பதை அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.”
பல சிவில் சமூக செயற்பாட்டாளர்களுடன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் பின்னர் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளரைச் சந்தித்து, மகஜரை கையளித்த பின்னர், தலைநகரில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட நவ சமசமாஜக் கட்சியுடன் இணைந்த காணாமல் ஆக்கப்பட்டோர் விசாரணைக் குழுவின் ஏற்பாட்டாளர் சுந்தரம் மகேந்திரன் இந்த விடயத்தை தெரிவித்தார்.
போர் அச்சம் காரணமாக மியன்மாரில் இருந்து தப்பி வந்த ரோஹிங்கியாக்களை மீண்டும் அந்த நாட்டுக்கு நாடு கடத்தக்கூடாது என வலியுறுத்தி சிவில் ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் பலர் கடந்த வார இறுதியில் கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
‘இலங்கையில் இருந்து ரோஹிங்கியாக்களை சுத்தப்படுத்தாதே, மியன்மார் பயங்கரவாதத்திலிருந்து தப்பி ஓடிய ரோஹிங்கியாக்களை காப்பாற்று, ரோஹிங்கியா போர் அனாதைகளை இராணுவ முகாமில் அடைத்தது யாருடைய உத்தரவில்?, ரோஹிங்கியாக்களை இலங்கையிலிருந்து வெளியேற்றாதீர்கள்’ போன்ற வசனங்கள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தை நடத்தினர்.
உயிர் தப்பி இந்த நாட்டிற்கு வருகைத்தந்த மியன்மார் ரோஹிங்கியா முஸ்லிம்களை பாதுகாப்பது இந்த நாட்டு பிரஜைகளின் பொறுப்பு என, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, காணாமல் ஆக்கப்பட்டோர் விசாரணைக் குழுவின் அழைப்பாளர் சுந்தரம் மகேந்திரன் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
“ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது மியன்மார் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. கொல்கிறார்கள். வாழும் ஆசையோடும், வாழும் உரிமையோடும் அந்த நாட்டை விட்டு வெளியேறி, கடல் மார்க்கமாக இன்று இலங்கைக்கு வந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள். இதில் சிறு குழந்தைகள் உள்ளனர். அவர்களைப் பாதுகாப்பது இந்த நாட்டின் குடிமக்களாகிய நமது பொறுப்பு.”
யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் வடக்கிலும் தெற்கிலும் இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமைக்கு எதிராக தனது உயிரைப் பணயம் வைத்து நீதிக்காக தொடர்ச்சியாக வாதிட்டு வரும் மனித உரிமை செயற்பாட்டாளரான காணாமல் ஆக்கப்பட்டோர் விசாரணைக் குழுவின் அழைப்பாளர் சுந்தரம் மகேந்திரன். ரோஹிங்கியா முஸ்லிம்களை இராணுவ முகாமில் தடுத்துவைத்ததற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கான காரணத்தையும் வெளிப்படுத்தினார்.
“அவர்களை இராணுவ முகாமில், இராணுவக் காவலில் வைத்திருப்பதை நாங்கள் எதிர்க்கிறோம். ஏனென்றால் அவர்கள் இராணுவ பயங்கரவாதத்திற்கு பயந்து இந்த நாட்டிற்கு வந்தனர். அவர்கள் இங்கு வந்த பிறகும், இப்போது மீண்டும் இராணுவ முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர், அதாவது அந்தக் குழந்தைகள் இன்னும் மன அழுத்தத்திலும் பயத்திலும் இரவைக் கழிக்க வேண்டியுள்ளது. எனவே, அவர்களை உடனடியாக இராணுவ முகாமிலிருந்து வெளியே ஒரு சுதந்திரமான பொது சூழலுக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு பாதுகாப்பு, வைத்தியம், உணவு மற்றும் பிற வசதிகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.”
போர் அகதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த முகாமுக்குள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நுழைவதை விமானப்படை தடுத்ததையும் மனித உரிமை ஆர்வலர் கண்டனம் செய்திருந்தார்.
“அரசாங்கத்தால் அதைச் செய்ய முடியாவிட்டால், அவர்களை உடனடியாக ஐக்கிய நாடுகள் சபையிடம் ஒப்படைக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையிடம் ஒப்படைக்கப்பட்டால், அவர்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் அரசாங்கம் முகாமுக்குள் நுழைந்து அவர்களைப் பார்க்கவோ அல்லது அவர்களின் நலம் குறித்து கேட்கவோ கூட அனுமதிக்கத் தயாராக இல்லை.”
போரினால் பாதிக்கப்பட்ட வன்னியைச் சேர்ந்த மீனவர்களால் கடலில் சிக்கித் தவித்த ரோஹிங்கியாக்கள் குழு மீட்கப்பட்டது. அத்தகைய தமிழர்களுக்கு எதிராக கடுமையான மனித உரிமை மீறல்கள் நடந்த வரலாற்றையும் சுந்தரம் மகேந்திரன் நினைவு கூர்ந்தார்.
மியன்மாரில் இருந்து தப்பி வந்த ரோஹிங்கியாக்கள் குழு வலுக்கட்டாயமாக மியன்மாருக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கூறிய பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் அந்த கருத்தில் இருந்து பின்வாங்கி, ‘அவர்கள் அகதிகளாக அங்கீகரிக்கப்பட்டால்’ சர்வதேச சட்டத்திற்கு அமைய செயற்படத் தயாராக இருப்பதாகக் கூறினார்.
இருப்பினும், வரும் நாட்களில் மேலும் ஒரு இலட்சம் சட்டவிரோத குடியேறிகள் இலங்கைக்கு வருவார்கள் என புலனாய்வுத்துறை அறிக்கைகளை மேற்கோள் காட்டி எச்சரித்த அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் கருத்தை கண்டித்த சுந்தரம் மகேந்திரன், உள்நாட்டு மக்களைத் தூண்டிவிடுவதற்காக அரசாங்கம் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுவதாகக் குற்றம் சாட்டினார்.
“இலட்சக் கணக்கில் மியன்மார் குடிமக்கள் இலங்கைக்கு வருவார்கள்… வருவார்கள் எனக் கூறி மக்களைத் தூண்டிவிட வேண்டாம் என நாங்கள் அரசாங்கத்திடம் கூறுகிறோம். “எத்தனை பேர் வந்தாலும், அவர்களை அகதிகளாக ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டுனெ்பதே முக்கிய குறிக்கோள்.”
20 நாட்களுக்கும் மேலாக, முல்லைத்தீவு விமானப்படை தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, மியன்மாரின் பயங்கரங்களில் இருந்து தப்பிவந்த ரோஹிங்கியாக்களை அவர்களது நாட்டுக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என வலியுறுத்தும் வகையில், போரினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவில் போராட்டம் ஒன்று இடம்பெற்றிருந்தது.
மூன்று வாரங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்த 115 அகதிகள் தற்போது முல்லைத்தீவு விமானப்படை தளத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் படகை செலுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் 12 பேர் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில், 2025 ஜனவரி 7ஆம் திகதி புதன்கிழமை விடுவிக்கப்பட்டனர்.
இவர்களில் நாற்பதுக்கும் மேற்பட்ட உள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. பாதுகாப்பான நாட்டில் அரசியல் தஞ்சம் பெறுவதே அவர்களின் எதிர்ப்பார்ப்பாகும். ரோஹிங்கியாக்களின் நலன் குறித்து விசாரிக்க மனித உரிமைகள் ஆணைக்குழு முல்லைத்தீவு விமானப்படை தளத்திற்குள் நுழைவதைத் தடுத்தமைக்காக குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் மன்னிப்பு கோரியிருந்தனர், எனினும் அதன் பின்னர் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் அங்கு சென்றார்களா என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.