2026-சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் என செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார் .
மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியதாவது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊர் ஊராக சென்று விளம்பரம் செய்கிறார். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவிற்கு தனது மகனோடு வந்த துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒரு பெண் அதிகாரியான மாவட்ட கலெக்டரை இருக்கையில் இருந்து எழ வைத்திருக்கிறார். இந்த ஆட்சியில் அதிகாரிகள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதற்கு இதுவே சாட்சி. உலகத் தமிழ் மாநாடு தி.மு.க. நடத்திய போது உலகத்திலிருந்து வந்த அறிஞர்கள் எல்லாம் கீழே அமர வைக்கப்பட்டார்கள். கலைஞர் குடும்பம் மட்டும் மேடையில் அமர வைக்கப்பட்டார்கள். அனுபவிக்கிறார்கள், அனுபவிக்கட்டும். இன்னும் ஒரு வருடம் தான். அதற்கடுத்து மக்கள் இவர்களை எங்கே வைப்பார்கள் என்று தெரியாது. 2026-சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்று மீண்டும் எடப்பாடியார் முதல்-அமைச்சராக வருவார். இவ்வாறு அவர் கூறினார்.