அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றார். இதன்பின்னர் பொதுமக்களுக்கு அவர் ஆற்றிய உரையில், அமெரிக்க தொழிலாளர்கள் மற்றும் குடும்பங்களை பாதுகாப்பதற்காக, நம்முடைய வர்த்தக நடைமுறையை நான் உடனடியாக மாற்றியமைக்க உள்ளேன் என்று கூறியுள்ளார். நம்முடைய குடிமக்களை பணக்காரர்களாக மாற்ற, நம்முடைய மக்களுக்கு வரி விதிப்பதற்கு பதிலாக, வெளிநாடுகளுக்கு நாம் வரி விதிக்க போகிறோம். இந்த நோக்கத்திற்காக, வெளியுறவு வருவாய் பிரிவு ஒன்று உருவாக்கப்படும்.
இதன்மூலம் அனைத்து வரிகளும், கட்டணங்களும் மற்றும் வருவாய்களும் வசூலிக்கப்படும் என கூறியுள்ளார். எங்களுடைய நாட்டின் நகரங்களில் சட்டம் மற்றும் ஒழுங்கை திரும்ப கொண்டு வர போகிறோம் என்றும் அவர் கூறினார். நிற வேற்றுமையின்றி தகுதி அடிப்படையிலான சமூகம் ஒன்றை உருவாக்க நாங்கள் முழு முயற்சியை எடுப்போம் என்றும் டிரம்ப் கூறினார். அமெரிக்க எதிரிகளை வீழ்த்த மற்றும் தங்களுடைய ஒற்றை திட்டத்தில் கவனம் செலுத்த ஏதுவாக, நம்முடைய ஆயுத படைகளுக்கு சுதந்திரம் அளிக்கப்படும் என்றும் கூறினார்.