”தமிழரசுக்கட்சிக்கோ தமிழ் தேசிய உணர்வுக்கோ ,தமிழர் விடுதலைப் போராட்டத்துக்கோ தொடர்பற்ற, பொருத்தமற்ற ஒருவர் தலைமைப்பதவி ஆசையினால் செய்துவரும் சூழ்ச்சிகளினால் தமிழரசுக்கட்சி தனது தடத்தை,,சுயத்தை, கொள்கை, கோட்பாட்டை தனது விசுவாசிகளை இழந்து இன்று பலரும் விமர்சிக்கும், எள்ளி நகையாடும் கட்சியாகிவிட்ட நிலையில்,”நான் மேற்கொண்ட இந்திய பயணத்தை தடுக்க பெரும் சதி மேற்கொள்ளப்பட்டது.அது தொடர்பில் சுமந்திரனையும் விசாரிக்க வேண்டும்” என சிறீதரன் எம்.பி. பாராளுமன்றத்தில் கொண்டுவந்த சிறப்புரிமைப்பிரச்சினை உள் ”வீட்டு” சண்டையை வீதிக்கு கொண்டுவந்துள்ளது”
கே.பாலா
தமிழரசுக்கட்சியை தமது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் சூழ்ச்சியில் சுமந்திரன் அணி வெற்றிபெற்றுள்ளது.தமிழரசுக்கட்சியின் தலைமைத்துவம்,விசேட குழுக்களை நியமிக்கும் ,தீர்மானங்களை எடுக்கும்,அறிவிக்கும் அதிகாரங்கள் என அனைத்தும் திருகோணமலையில் கடந்த 18 ஆம் திகதி இடம் பெற்ற தமிழரசுக் கட்சியின் மத்திய செயற் குழு கூட்டத்தின் பின்னர் சுமந்திரன் அணியின் கைகளுக்கு முழுமையாக சென்றுள்ளது.அதேவேளை இதுவரை ”வீட்டுக்குள்” நடந்து வந்த சண்டைகளும் சதிகளும் ,குழி பறிப்புக்களும் தற்போது வீதிக்கு வந்துள்ளதால் சந்தி சிரிக்கும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது.
தமிழரசுக்கட்சிக்கோ தமிழ் தேசிய உணர்வுக்கோ ,தமிழர் விடுதலைப்போராட்டத்துக்கோ தொடர்பற்ற, பொருத்தமற்ற ஒருவர் தலைமைப்பதவி ஆசையினால் செய்த, செய்துவரும் சூழ்ச்சிகளினால் ஒரு வருட காலத்திற்குள் தமிழரசுக்கட்சி தனது தடத்தையும்,சுயத்தையும் கொள்கை கோட்பாட்டையும் தனது விசுவாசிகளையும் இழந்து தமிழ்த்தேசிய விரோத சக்திகளின் கைகளில் சிக்குண்டு சிதறிப்போய் இன்று பலரும் விமர்சிக்கும்,ஏளனம் செய்யும் எள்ளிநகையாடும் வகையில் நடு வீதியில் அம்மணமாக நிற்கின்றது
தமிழரசுக்கட்சியின் தலைவர் பதவியிலிருந்து மாவைசேனாதிராஜா வலுக்கட்டாயமாக நீக்கப்பட்டு பதில் தலைவராக தனது விசிவாசியான சி.வி.கே. சிவஞானத்தையும் செயலாளராக தனது ”கையாள் ”சத்தியலிங்கத்தையும் கட்சியின் உத்தியோக பூர்வ பேச்சாளராக தன்னையும் நியமித்ததுடன் இந்தப் பதவிகளைப் பயன்படுத்தி கட்சி விசுவாசிகளும் மத்திய குழு உறுப்பினர்களும் தமிழ்தேசிய உணர்வாளர்களுமான அரியநேத்திரன்,சிவமோகன் ஆகியோரை கட்சியிலிருந்து இடை நிறுத்தியும் தவராசா.சரவணபவன் ஆகியோரை கட்சியிலிருந்து வெளியேற்றியும் சிறீதரன்,ஸ்ரீநேசன் ஆகியோரின் பதவிகளுக்கும் உறுப்புரிமைக்கும் ஆப்பை தயார் படுத்தியவாறு தனது ஆட்டத்தை தொடங்கிய சுமந்திரன் கடந்த 18 ஆம் திகதிய செயற் குழுக்கூட்டத்தின் மூலம் தனது ஆட்டத்தின் இறுதிக்கட்டத்துக்கு வந்துள்ளார்
திருகோணமலையில் கடந்த 18 ஆம் திகதி நடந்த தமிழரசுக்கட்சியின் செயற்குழுக்கூட்டத்தில் எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்ட தீர்மானங்கள் மூலம் சிறீதரன் தரப்பு தமிழ் தேசிய உணர்வாளர்கள், கட்சி விசுவாசிகள் முற்றாக புறக்கணிக்கப்பட்டு சுமந்திரன் அணி கையாட்கள்,அடிவருடிகள், செம்புதூக்கிகள் பதவிகளுக்கும் விசேடகுழுக்களுக்கும் நியமிக்கப்பட்டுள்ளதுடன் சுமந்திரன் இல்லாமல் அரசுடனோ சர்வதேசத்துடனோ எந்த வித சந்திப்புக்கள் பேச்சுக்கள் இடம் பெறக்கூடாதென்பதற்கான ‘சதியோசனை”களும் முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்த செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் கட்சியின் ஊடக பேச்சளரான சுமந்திரன் அறிவிக்கையில், உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலுக்கான வேட்புமனுக்களை 2023ஆம் ஆண்டு சமர்ப்பித்த தமிழரசுக்கட்சியின் வேட்பாளர்கள், கட்சிக்கு எதிராக செயற்பட்டிருப்பின், அவர்களின் பெயர்கள் நீக்கப்படும், இனப்பிரச்சினைக்கு முக்கியமான அரசியல் தீர்வாக இலங்கை தமிழ் அரசு கட்சி சமஷ்டி முறையிலான ஆட்சியையே வலியுறுத்துகின்றது,இனியும் வலியுறுத்தும், இதற்காக தற்போது 7பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது . இந்தக்குழு இந்த விடயங்களுக்கு பொறுப்பாக இருந்து செயற்படும் .தமிழ் பேசும் பரப்பில் உள்ள மற்ற கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும்.இதற்கு மேலதிகமாக கட்சியின் வழக்குகளும் நிலுவையில் உள்ளன.அத்தனை வழக்குகளையும் முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாகவும் பேசப்பட்டது மேலும் கட்சிக்கு எதிராக செயற்பட்டவர்களிடம் விளக்கம் கோரப்பட்டு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
இந்த தீர்மானங்கள் மூலம் சுமந்திரன் தமிழரசுக்கட்சியில் தனது ஆதிக்கத்தை பலப்படுத்தியுள்ளார்.ஏனெனில் உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்பாளர்களில் சிறீதரன் தரப்பினருக்கு ஆப்பு வைக்கப்படும். அத்துடன் சமஷ்டியே தமிழரசுக்கட்சியின் இறுதி தீர்மானம் எனத்தெரிவித்துள்ளதன் மூலம் ஏனைய தமிழ் தேசிய கட்சிகளுடனான பேச்சுகளுக்கும் ஒன்றிணைவுகளுக்கும் முற்றுபுள்ளி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதற்காக நியமிக்கப்பட்டுள்ள 7 பேர் கொண்ட குழுவில் இருப்பவர்கள் தலைவர் சி.வி.கே சிவஞானம்,சுமந்திரன், சத்தியலிங்கம் இரா.சாணக்கியன், துரைராஜசிங்கம் .சயந்தன்,சிறீதரன்.இதில் சிறீதரனைத் தவிர ஏனையவர்கள் சுமந்திரன் அணியினர். ஆகவே சிறீதரனின் ஒன்றிணைவதற்கான ஏனைய தமிழ்த்தேசிய கட்சிகளுடனான பேச்சுக்கள் இனி இடம்பெற வாய்ப்பில்லை. கட்சிக்கு எதிராக செயற்பட்டவர்களிடம் விளக்கம் கோரப்பட்டு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்பதன் மூலம் சிறீதரன் அணியினரின் தலைகளுக்கு மேலே கத்தி தொங்கவிடப்பட்டுள்ளது.
திருகோணமலையில் இடம்பெற்ற தமிழரசுக்கட்சியின்இந்த செயற்குழு கூட்டத்தின் போது சிறீதரனின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் இன்னும் பல நகர்வுகளை சுமந்திரன் அணி முன்னெடுத்தபோதும் அந்த முயற்சிகள் கைகூடவில்லை.அதாவதுதமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற குழு சர்வதேச தூதுவர்களுடன் சந்திப்புக்களை நடாத்தும் போது சுமந்திரனையும் அழைத்து செல்ல வேண்டும் என்று இரா.சாணக்கியன் ஒரு முன்மொழிவை கொண்டுவந்திருந்தார். ஆனால் அப்படி தேவையில்லை, பாராளுமன்ற குழுவை சர்வதேச நாடுகளின் தூதுவர்கள் அழைத்தால் பாராளுமன்ற குழு மட்டும் தான் சந்திக்க வேண்டும், அந்த குழுவிற்குள் சுமந்திரன் தேவையற்ற நபர் என கூட்டத்தில் இருந்த சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் கடும் எதிர்ப்பு வெளியிட்டதால் இந்த விடயம் தீர்மானம் எடுக்கப்படாமல் கை விடப்பட்டது.
அதேபோன்று அரசியலமைப்பு உருவாக்க விவகாரங்கள், அரசியல் சார் உயர் கூட்டங்களில் கட்சியின் பதில் தலைவர் என்ற வகையில் சிவஞானமும், சுமந்திரனும் அழைத்து செல்லப்பட வேண்டும் என்று சுமந்திரன் அணியினால் இன்னொரு முன்மொழிவு முன்வைக்கப்பட்டது. சிவஞானம் கட்சித் தலைவர் என்ற ரீதியில் அழைத்து செல்லப்படலாம், சுமந்திரன் என்ன அடிப்படையில் அழைக்கப்பட வேண்டும் என உறுப்பினர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் எதுவும் வழங்காமல் சுமந்திரன் அணி அந்த முன் மொழிவையும் கைவிட்டது.
பாராளுமன்றத்தின் அரசியலமைப்பு பேரவை வரலாற்றில் முதலாவது தமிழ் உறுப்பினராக சிறீதரன் இந்த முறை உள்ளக தேர்தலில் வென்று தெரிவுசெய்யப்பட்டிருந்தார். அந்த அரசியலமைப்பு பேரவை இதுவரை 6 தடவைக்கு மேல் கூடி பல முக்கிய நியமனங்களை வழங்கும் முடிவை இறுதி செய்திருக்கிறது.அந்த வரிசையில் அண் மையில் ஊழல் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் இயக்குநர் தெரிவின் போது இருவர் முன்னிலையில் இருந்தார்கள். அந்த இருவருக்கு இடையில் ஏற்பட்ட போட்டியில் சிறீதரனின் வாக்கு தீர்மானிக்கும் வாக்காக இருந்தது.அதில் தற்போது இயக்குநராக தெரிவு செய்யப்பட்டிருக்கும் நீதிபதிக்கு சிறீதரன் தனது வாக்கை செலுத்தியிருந்தார். இந்த நீதிபதி தான் இன ,மத ரீதியாக செயற்பட்டு இன ,மத விரோதங்களை ஏற்படுத்திய பொதுபலசேனவின் ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்தவர்
இந்த விடயம் இந்த செயற் மத்திய குழுவில் முன் எடுக்கப்பட்டு சஜித் பிரேமதாச ஆதரவளித்தவருக்கு சிறீதரன் ஆதரவளித்திருக்க வேண்டும் என சுமந்திரனும் சயந்தனும் வாதிட்டார்கள். இதன்போது கருத்து தெரிவித்த சிறீதரன் “அரசியலமைப்பு பேரவைக் கூட்டத்தில் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்று எனக்கு தெரியும். அதை நான் எடுப்பேன் நீங்கள் உங்கள் வேலைகளை மட்டும் செய்யுங்கள்” என்ற சாரப்பட்ட காட்டமான பதிலை வழங்கியதையடுத்து அந்த விடயமும் அத்தோடு கைவிடப்பட்டது.
இந்நிலையில் மட்டக்களப்பு துரைராஜசிங்கம் ”அரசியலமைப்பு பேரவை விடயங்களில் சுமந்திரனின் ஆலோசனையை பெற வேண்டும்” என கூற முற்பட, அதற்கு சிறீதரன் “எனக்கு சொந்த சுயபுத்தி இருக்கிறது என்ன முடிவு எடுக்க வேண்டும் என எனக்கு தெரியும். நீங்கள் வேண்டுமானால் அவரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ளுங்கள்” என ஆவேசமடையவே துரைராஜசிங்கம் அமைதியாகியுள்ளார்
இந்த செயற்குழுக்கூட்டத்தில் இப்படி பல முன்மொழிவுகள், விடயங்கள் மூலம் சிறீதரனை எப்படியாவது கட்டுப்படுத்த வேண்டும் என்ற நகர்வுகளை சுமந்திரன் அணி தீவிரமாக முன்னெடுத்த போதும் . அவை தற்காலிகமாக தோற்கடிக்கப்பட்டுள்ளன. எனினும் தமிழரசுக்கட்சியில் சிறீதரனின் நிலைமை ”நித்தம் கண்டம்..பூரண ஆயுள்”என்றவகையிலேயே உள்ளது. அதேவேளை இந்த தீர்மானங்கள் ,நியமனங்கள் ,முன்மொழிவுகள் மூலம் சுமந்திரன் அணி வெற்றிகரமாக தமிழரசுக்கட்சிக்கு ”பாடை”கட்டிவிட்டார்கள். இந்த ”பாடை கட்டலுக்கு” ஆதரவாக மூத்த பத்திரிகையாளர்”என முன்னொரு காலத்தில் போற்றப்பட்டு பின்னர் ”தோற்றுப்போன பத்திரிகையாளர்” எனஅழைக்கப்படும் ஒரு சில பணத்திற்கு ”பத்தி” எழுதும் பத்திரிக்கையாளர்கள் ”சங்கு” ஊதி பறை மேளம் அடிக்கின்றனர்.
இவ்வாறான நிலையில் தான் மேற்கொண்ட இந்திய பயணத்தை தடுக்க பெரும் சதி மேற்கொள்ளப்பட்டதாகவும் அது தொடர்பில் சுமந்திரனையும் விசாரிக்க வேண்டுமென சிறீதரன் எம்.பி. பாராளுமன்றத்தில் கொண்டுவந்த சிறப்புரிமைப்பிரச்சினை உள் ”வீட்டு” சண்டையை சந்திக்கு கொண்டுவந்துள்ளது.
இந்தியாவிற்கு நான் பயணம் மேற்கொண்டபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணத்தடை உள்ளதாகத் தெரிவித்து விமானநிலைய அதிகாரிகளினால் தடுக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு நீதி வழங்கப்பட வேண்டும் ,அத்துடன் அவ்வாறு தடுக்கப்பட்டமைக்காண காரணமென சில விடயங்களைக் கூறியுள்ள முன்னாள் எம்.பி. சுமந்திரனிடமும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என பாராளுமன்றத்தில் வலியுறுத்திய சிறீதரன் இந்நடவடிக்கைகளின் பின்னணியில் பெரும் சதி இருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
19 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் தனியார் ஊடகமொன்றுக்கு பேட்டியளித்த முன்னாள் எம்.பி. சுமந்திரன் ”சிறீதரன் தடை செய்யப்பட்ட கனடாவிலிருந்து வருகின்ற அமைப்போடு பேச முனைந்தாகவும் அதற்காகத்தான் அவர் சென்னை செல்ல இருந்ததாகவும் அந்த காரணத்தின் அடிப்படையில்தான் அவரை தடுக்க விமான நிலையத்தில் முயற்சி செய்திருக்கலாம் என்ற ஊக்கத்தின் அடிப்படையில் சிறீதரனை அவர்கள் மறித்திருக்கலாம். ஊடகங்களில் வெளிவந்த செய்திகளை வைத்துதான் நான் இதனைக்கூறுகின்றேன்” என்று அதில் கூறியிருந்தார்.
எனவே இதுதொடர்பில் நீங்கள் சுமந்திரனிடம் விசாரித்தால் எந்த எந்த ஊடகங்களில் இந்த செய்தி வந்துள்ளது என்பதனை அறிந்து அந்த உஊடகங்களின் பிரதானிகளை விசாரிப்பதன் மூலம் உண்மையைக்கண்டறிய முடியும். இது எனக்கு எதிராக செய்யப்பட்ட மிகப்பெரும் சதியாகவே நான் கருதுகின்றேன்.விமான நிலையத்தில் தடுக்கப்பட்டமை தொடர்பில் சிறீதரன் தனக்கு தெரிவிக்கவில்லை என்றும் சுமந்திரன் அதில் கூறியுள்ளார். நான் அவரை சென்னையில் சந்தித்தபோது சுமந்திரனும் இது தொடர்பில் என்னிடம் எதுவும் கேட்கவும் இல்லை.
இதனை விட வடக்கு மாகாண சபையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஒரு உறுப்பினராக இருந்த அயூப் அஸ்மின் என்னை விமான நிலையத்தில் தடுத்த அன்றையய தினமான 10 ஆம் திகதி தன்னுடைய முக நூலில் ”கடந்த நாட்களில் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் விமான நிலையத்தில் எவ்வித இடையூறுகளும் எவராலும் ஏற்படுத்தப்படவில்லை. அவ்வாறு பரப்பப்படுகின்ற செய்திகளில் உண்மைகள் எதுவும் இல்லை. -விமான நிலைய உயரதிகாரி”என்ற செய்தியை வெளியிட்டுள்ளார்.
நான் இந்தியாவிலுள்ள பிரபல அரசியல் தலைவர் சீமானுடன் இருக்கும் படத்தையும் தன்னுடைய முக நூலில் போட்டு எனக்கு எதிராக இந்த செய்தியை அவர் பரப்பி உள்ளார். அஸ்மினும் சுமந்திரனும் நெருங்கிய நண்பர்கள்.சுமந்திரன் சொன்ன செய்திக்கும் அஸ்மின் போட்டுள்ள பதிவுக்கும் .ஏதோ ஒரு சங்கதி இருப்பதுபோல் எனக்குத்தெரிகின்றது. என்னை அந்த நிகழ்வுக்கு போக விடாது தடுப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆகவே இதற்குப் பின்னால் சதி உள்ளது. எனவே இவ்விடயத்தில் மிகக்கூடிய கவனம் எடுத்து விசாரிக்கப்பட வேண்டும்.
நான் எந்தவொரு காலத்திலும் இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள கனடாவிலுள்ள அமைப்புடன் பேசுவதற்கு தயாராகவில்லை. அப்படி யாரும் என்னைக் கேட்டதுமில்லை. அவ்வாறான முயற்சி எதுவும் மேற்கொள்ளப்படவும் இல்லை. அரசின் பேச்சாளர் போல் அல்லது புலனாய்வுத்துறையின் பேச்சாளர் போல் ஊ கத்தின் அடிப்படையில் ஊடகங்களில் வந்தது என சுமந்திரன் குறிப்பிட்டுள்ளது மிகப்பாரதூரமானது என பாராளுமன்றத்தில் பகிரங்கமாக சுமந்திரன் மீது சிறீதரன் சீறிப் பாய்ந்துள்ளார்.
சுமந்திரன்- சாணக்கியன் தரப்பின் சீண்டல்களையும் குழிபறிப்புக்களையும் புறக்கணிப்புக்களையும் நக்கல்,நையாண்டிகளையும் கட்சிக்காக பொறுத்துவந்த சிறீதரன் பொறுமையிழந்ததன் வெளிப்பாடாகவே பாராளுமன்றத்தில் முன் வைத்த சுமந்திரன் மீதான குற்றச்சாட்டுக்களைப்பார்க்க வேண்டும். தமிழரசுக்கட்சிக்குள் நடக்கும் இந்த குத்துவெட்டுக்கள், காட்டிக்கொடுப்புக்கள், கழுத்தறுப்புக்கள் குழிபறிப்புக்கள் சந்தி சிரிக்கும் நிலைக்கு வந்துவிட்டது எனினும் தலைக்கனம் கொண்ட சுமந்திரன் இதற்கு பதிலடியாக சிறீதரனை ஏதோவொரு வலையில் பழி தீர்ப்பார். கட்சியிலிருந்து வெளியேற்றும் காய்களை இன்னும் வேகமாக நகர்த்துவார்.அவரின் செம்புதூக்கிகள் சிறீதரனை இன்னும் மோசமாக எதிர்க்கத்தொடங்குவர். எனவே சிறீதரன் முன்னரைவிட இன்னும் கவனமாகவும் முன்னெச்சரிக்கையாகவும் பொறுமையாகவும் இருப்பதே நல்லது