”வடக்கு,கிழக்கில் தமிழரசின் ”வீட்டுக்குள்’ நடக்கும் தலைவர் பதவிக்கான குத்து வெட்டுக்களினால் தமிழ் தேசிய அரசியல் பலவீனமடைந்து சந்தி சிரிக்கும் நிலையில் அதனைப் பார்த்து எள்ளி நகையாடிக் கொண்டிருந்த தென்னிலங்கை தற்போது முன்னாள் ஜனாதிபதிகளின் ”’அரச வீடு” தொடர்பாக அநுர -மஹிந்த கையில் எடுத்துள்ள அரசியலினால் ஆத்திரப்பட,ஆரவாரப்பட, அசிங்கப்படத் தொடங்கியுள்ளது”
கே.பாலா
அண்மைக் காலமாக வடக்கு,கிழக்கு தமிழ் தேசிய அரசியல் பரப்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சின்னமான வீடு, வீட்டுக்குள் நடக்கும் தலைமைத்துவத்திற்கான சண்டைகள் , சதிகள் பெரும் பரப்பரப்பையும்.பதற்றத்தையும் பரிதவிப்பையும் பரிகாசத்தையும் ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது தென்னிலங்கையிலும் ”வீடு ”பெரும் அரசியல் பிரளயங்களை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளதுடன் தென்பகுதி அரசியல் பரப்பையும் ”வீடு’ கொதி நிலைக்கு கொண்டு வந்துள்ளது.
தமிழ் தேசிய அரசியல் பரப்பில் தமிழர்களின் தாய்கட்சியான ”வீடு” சின்னம் கொண்ட இலங்கை தமிழரசுக்கட்சிக்குள் தலைவர் பதவிக்கு ஏற்பட்ட சண்டைகள், சதிகள் அதன் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் மரண வீட்டிலும் எதிரொலித்து ”துரோகிகள்’என பட்டம் சூட்டப்பட்ட தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் மாவை சேனாதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தக்கூட வரமுடியாத நிலையும் இன்னும் சிலர் இரகசியமாக திடீரென வந்து அஞ்சலி செலுத்திவிட்டு ஓடிமறைந்த நிலையும் நாடு முழுவதுமிருந்து இன ,மத .மொழி வேறுபாடுகளின்றி அரசியல் தலைவர்கள், கட்சிகளின் தலைவர்கள் ,முக்கியஸ்தர்கள் பலரும் மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரியையிலும் இறுதி ஊர்வலத்திலும் பங்கேற்றிருந்த போதிலும் இந்த ”துரோகிகள்”பட்டம் சூட்டப்பட்டவர்கள் மாவை சேனாதிராஜாவின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்க முடியாத நிலையும் ஏற்பட்டிருந்தது.
அதுமட்டுமன்றி மாவை சேனாதிராஜாவின் மரண வீட்டு வாசலிலும் இறுதிக்கிரியை நடைபெற்ற மாவிட்டபுரம் தச்சன்காடு இந்து மயானத்திலும் வைக்கப்பட்டிருந்த ”கட்சிக்காக தன்னை அர்ப்பணித்த மாவை சேனாதிராஜா ஐயாவை இறுதி சந்தர்ப்பத்தில் அவமானப்படுத்தி அதில் இன்பம்கண்ட கயவர்கள் யாரும் அஞ்சலி செலுத்துவதற்கு வரவேண்டாம் இது 18 பெருக்குமான எச்சரிக்கை” எனக்கூறி தமிழரசுக்கட்சியின் பேச்சாளர் சுமந்திரன், செயலாளர் சத்தியலிங்கம், பதில்தலைவர் சிவஞானம் ,மத்தியகுழு உறுப்பினர்களான சாணக்கியன்,குலநாயகம், இரத்தினவடிவேல்,செழியன் ,துரைராஜசிங்கம், கலையரசன் ,கமலேஸ்வரன்,ரஞ்சினி,ரவிகரன் சயந்தன்,செயோன் சாந்தி.மட்டக்கப்பு சரவணபவன் ,பரம்சோதி. செல்வராசா ஆகியோரின் படங்கள் பொறித்த பாரிய பதாகை தமிழரசின் தலைமைப்பதவி பிரச்சினையால் ”வீடு” பிளவுபட்டுள்ளதை பகிரங்கமாக வெளிச்சம் போட்டுக்காட்டியது
இவ்வாறு தகுதியற்ற தமிழ் தேசியப்பற்றற்ற .அரசின் முகவராக செயற்படுபவர் என தமிழ் தேசிய உணர்வாளர்களினால் குற்றம் சாடடபடும் ஒருவரின் தமிழரசுக்கட்சி தலைவர் பதவி மோகத்தினால் ”வீடு” இரண்டுபட்டுப் போயுள்ளதுடன் இவ் வீட்டு பிரச்சினைகளே தமிழ் தேசிய அரசியலை இன்று ஆக்கிரமித்து பேசு பொருளாகியுள்ளதுடன் தமிழ் தேசிய அரசியலையும் மலினப்படுத்தியுள்ளது.
இவ்வாறு ”வீடு ”தமிழ் தேசிய அரசியலை சந்தி சிரிக்கும் நிலைக்கு கொண்டுவந்து விட்டுள்ள நிலையில் இந்த வீட்டைப்பார்த்து எள்ளிநகையாடிக்கொண்டிருந்த தென்னிலங்கை தற்போது அங்கும் ஏற்பட்டுள்ள ”வீடு” தொடர்பான அரசியலினால் ஆத்திரப்பட,ஆரவாரப்பட, அசிங்கப்படத் தொடங்கியுள்ளது. தமிழரசுக் கட்சியின் வீட்டிற்குள் இரு அணிகள் குத்துவெட்டுக்களில் ஈடுபடுவதைப்போன்றே தென்னிலங்கையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த-இந்நாள் ஜனாதிபதி அநுர அணிகள் ”வீடு”தொடர்பான சண்டையைத் தொடங்கியுள்ளன.
இலங்கையைப் பொறுத்தவரையில் ஜனாதிபதிகள் ,பிரதமர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்புரிமைகள், வரப்பிரசாதங்கள் அதிகம். இந்த சிறப்புரிமைகள் ,வரப்பிரசாதங்கள் முன்னா ஜனாதிபதிகள் ,பிரதமர்களுக்கும் அன்று முதல் இன்றுவரை ஆட்சியிலுள்ள அரசுகளினால் வழங்கப்பட்டே வருகின்றன. முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமருக்கு வழங்கப்படும் இந்த சிறப்புரிமைகள் ,வரப் பிரசாதங்களுக்காக வருடமொன்றுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபா செலவிடப்பட்டு வருகின்றது.
இவ்வாறான நிலையில்தான் ”மாற்றம்”என்ற கோஷத்துடன் ஆட்சியைகைப்பற்றிய அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு செலவுகுறைப்பு என்ற பெயரில் முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சிறப்புரிமைகள், வரப்பிரசாதங்களில் கை வைத்துள்ளது. மக்களின் வரிப்பணத்தை வீண் செலவுகளிலிருந்து பாதுகாக்கவே இந்த நடவடிக்கை என அநுரகுமார அரசு காரணம் கற்பிக்கும் நிலையில் இது மஹிந்த ராஜபக்சவை இலக்குவைத்து அநுர அரசு நடத்தும் அரசியல் பழிவாங்கல் என ராஜபக்ச தரப்பினரும் அவர்களது கட்சியினரும் குற்றம் சுமத்துகின்றனர்
முன்னாள் ஜனாதிபதிகள் அரச மாளிகைகளிலிருந்து வெளியேற வேண்டும் என அநுர குமார அரசு விடுத்துள்ள அறிவிப்புக்கு நாட்டு மக்களிடையிலும் அரசியல்வாதிகளிடையிலும் ஆதரவும் எதிர்ப்பும் காணப்படுகின்றன.நாட்டுக்கு சேவை செய்த முன்னாள் ஜனாதிபதிகளுக்கான கௌரவத்தை அரசு தொடர்ந்தும் வழங்க வேண்டுமென ஒருதரப்பினரும் மக்களின் வரிப்பணத்தை இவர்களின் ஆடம்பரங்களுக்கு செலவிடக்கூடாதென இன்னொரு தரப்பினரும் வாதிட்டு வருகின்றனர்.
அதேவேளை முன்னாள் ஜனாதிபதிகளை அரச மாளிகைகளிலிருந்து அநுரகுமார அரசு நினைத்தவாறு வெளியேற்ற முடியாது. அதில் சட்ட சிக்கல்கள் உள்ளன. முன்னாள் ஜனாதிபதிகள் தாம் விரும்பினால் மட்டுமே அரசமாளிகைகளிருந்து வெளியேறலாம் எனவும் சட்ட நிபுணர்கள்,அரசியல் ஆய்வாளர்கள் வெளிப்படுத்துகின்றனர். இதனால் தான் அரச மாளிகையிலிருந்து வெளியேறுங்கள் என அநுரகுமார அரசு உத்தியோகபூர்வமாக அறிவிக்காமல் வேண்டுகோள் மட்டுமே விடுத்துள்ளதுடன் அவர்களாக வெளியேறும்வகையில் முன்னாள் ஜனாதிபதிகளை குறிப்பாக மஹிந்த ராஜபக்சவை கடுமையாக விமர்சனம் செய்யும் பிரசார தந்திரத்தையும் முன்னெடுத்து வருகின்றது.
ஆனால் அநுரகுமார அரசின் இந்த பிரசாரங்களுக்கு ,சேறுபூசும் வேலைகளுக்கு ”நான் மஹிந்த ராஜபக்ச”என ஒற்றை வரியில் பதிலளித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளதுடன் குறிப்பிட்ட வீட்டிலிருந்து வெளியேற வேண்டும் என அநுரகுமார அரசு எனக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தால் அந்தவீட்டிலிருந்து அடுத்த நிமிடமே வெளியேறத் தயார் எனவும் அறிவித்துள்ளார்.ஏனெனில் அவ்வாறு அநுரகுமார அரசினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்க அரசியலமைப்பில் இடமில்லை என்பது மஹிந்த ராஜபக்சவுக்கு தெரியும்.
அதனால்தான் தனது வீட்டிலிருந்து தன்னை வெளியேற்ற அநுர அரசு சதி என்ற குற்றச் சாட்டை முன்வைத்து மஹிந்த ராஜபக்ச ஒருபுறம் தனது அனுதாப அரசியலை முன்னெடுக்க , மக்களின் வரிப்பணத்தில் அரச வீட்டில் சுகம் அனுபவிக்க மஹிந்த ராஜபக்சவை அனுமதிக்க முடியாதென மறுபக்கம் அநுர அணியும் மக்களைத் திருப்திப்படுத்த ”வீடு”தொடர்பான அரசியலைக் கையில் எடுத்துள்ளதால் தென்னிலங்கை அரசியலும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது
வடக்கு,கிழக்கில் ”வீட்டுக்குள்”(தமிழரசுக்கட்சி) நடக்கும் பிரச்சினைகளினால் தமிழ் தேசிய அரசியல் பலவீனமடைந்து சந்தி சிரிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதுபோல் தென்பகுதியிலும் ”வீடு” தொடர்பான அரசியலினால் முன்னாள் அரசியல் தலைவர்கள் அவமானப்படுத்தப்படும் அரசியலிலிருந்து அவர்கள் அகற்றப்படும், அவர்களின் கட்சிகள் பலவீனமாக்கப்படும் பிரசார யுக்திகள் அநுரகுமார அரசினால் திட்டமிட்டு முன்னெடுப்படுவதாகவே தோன்றுகின்றது.எது எப்படியோ வடக்கு,கிழக்கிலும் தெற்கிலும் இப்போது ”வீடே”பிரச்சினைக்குரியதாகவுள்ளது