தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் மாணவர்களுக்குச் சூழல்அறிவைப் புகட்டிச் சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் சூழல் பாதுகாப்பில் அவர்களைப் பங்குபற்றுநர்களாக்கும் நோக்குடனும், அவர்களின் பன்முக ஆளுமையை விருத்தி செய்யும் நோக்குடனும் பசுமை அறிவொளி என்னும் நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது. மாணவர்களை வலுவூட்டுகின்ற இப்பசுமை அறிவொளி நிகழ்ச்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை (09.02.2025) நல்லூர் திவ்ய ஜீவன சங்க மண்டபத்தில் நடைபெற்றது.
பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தலைமையில், ‘மாணவர்களுக்குச் சமூக விழுமியங்களைப் போதிப்பதில் பெற்றோரின் பங்கு‘ என்ற கருப்பொருளில் இந்நிகழ்ச்சி இடம்பெற்றது. இதில் ஆசிரியப் பார்வையில் வடக்கு மாகாண ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் கௌரி முகுந்தனும், உளவளப் பார்வையில் உளவளத்துணையாளர் ஜீவசர்மிலா வேந்தகுமாரும் வளவாளர்களாகக் கலந்துகொண்டு சிறப்புரைகளை ஆற்றியிருந்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் அவர்களின் பெற்றோர்களுடன் கலந்து கொண்டிருந்தார்கள். நிகழ்ச்சியின் இறுதியில் மாணவர்கள் அனைவருக்கும் சூழல் விழிப்புணர்வு நோக்கில் பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்டிருந்த அப்பியாசக் கொப்பிகள் வழங்கப்பட்டன. இதற்கான நிதி அனுசரணையை இலங்கையில் பல்வேறு சமூகப் பணிகளை முன்னெடுத்து வருகின்ற கனடாவைத் தளமாகக் கொண்ட ரொறன்ரோவின் மனிதநேயக் குரல் அமைப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.