இங்கிலாந்தின் லண்டன் நகரில் ஒயிட்சேப்பல் ரெயில் நிலையத்தில் உள்ள பெயர் பலகையில், ஊரின் பெயரை படித்து தெரிந்து கொள்வதற்கு வசதியாக, ஆங்கிலம் மற்றும் வங்காளத்தில் எழுதப்பட்டு இருந்தது. இதுபற்றி கிரேட் யார்மவுத் பகுதிக்கான எம்.பி. ரூபர்ட் லோவ் அவருடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்ட செய்தியில், இது லண்டன் நகரம். ரெயில் நிலையத்தின் பெயர் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் மட்டுமே இருக்க வேண்டும் என பதிவிட்டார். இரு மொழிகளில் இடம் பெற்ற பெயர் பலகையின் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
அவருடைய இந்த பதிவுக்கு ஒரு சிலர் ஆதரவும், சிலர் இரு மொழிகளில் பலகை இருப்பதில் தவறேதும் இல்லை என்றும் தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில், உலக பணக்காரர்களில் ஒருவர் மற்றும் எக்ஸ் வலைதள உரிமையாளரான எலான் மஸ்க், ரூபர்ட்டின் பதிவுக்கு தன்னுடைய ஆதரவை வெளிப்படுத்தி உள்ளார். கிழக்கு லண்டனுக்கு வங்காளதேச சமூகத்தினர் பெரும் பங்காற்றியுள்ளனர். ஒயிட்சேப்பல் பகுதியில் அவர்கள் அதிக அளவில் வசித்தும் வந்துள்ளனர். இந்நிலையில், அவர்களுக்கு மரியாதை அளிக்கும் வகையில் 2022-ம் ஆண்டு ஒயிட்சேப்பல் ரெயில் நிலையத்தில் வங்காள மொழியிலான பெயர் பலகை நிறுவப்பட்டது.