மகா கும்பமேளாவையொட்டி திரிவேணி சங்கமத்தில் இதுவரை 46.25 கோடி பக்கதர்கள் புனித நீராடி உள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த நிகழ்வு ஜன.12-ம் தேதி தொடங்கி வருகிற பிப். 26-ம் தேதி வரை என 45 நாட்கள் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் பொது மக்கள், சந்நியாசிகள், துறவிகள், சாதுக்கள், சாத்விகள், கல்பவாசிகள், யாத்ரீகர்களை உட்பட பலர் கலந்துகொண்டு திரிவேணி சங்கமத்தில் நீராடி வருகின்றனர். கும்பமேளா நடைபெறும் காலங்களில் திரிவேணி சங்கமத்தில் நீராடுவதை பலரும் புனிதமாக கருதுகின்றனர்.
மகா கும்பமேளாவை முன்னிட்டு சமீபத்தில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, மற்றும் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உள்ளிட்டோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். இதையொட்டி கடந்த சில நாள்களாக, பல்வேறு மாநிலங்களில் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் பிரயாக்ராஜுக்கு வந்துள்ளனர். பிரயாக்ராஜ் நோக்கிய பல நெடுஞ்சாலைகளில் நூற்றுக்கணக்கான கி.மீ க்கு போக்குவரத்து நெரிசல் நீண்டது. மத்தியப் பிரதேச நெடுஞ்சாலையில் மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மகா கும்பமேளாவில் இதுவரை 46.25 மக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாகி பௌர்ணமி என்பதால், இன்று இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.