ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரானது 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது. இந்த போரானது மூன்று ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது. போரில் பொதுமக்கள், வீரர்கள் என இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். தொடக்கத்தில் கீவ், கார்கிவ், டொனெட்ஸ்க் உள்ளிட்ட பல நகரங்களை ரஷியா கைப்பற்றியது. எனினும், அவற்றை உக்ரைன் பதிலடி கொடுத்து பின்னர் மீட்டது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் ஆதரவு கிடைத்து வருகின்றது. இதற்கேற்ப, அந்நாடுகளும் ராணுவம் மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன. போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சிகள் ஒருபுறம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கேற்ப, ரஷிய அதிபருடன் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொலைபேசி வழியே பேசினார்.
எனினும், உக்ரைனை தவிர்த்து விட்டு இந்த பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என கூறப்படுகிறது. இதேபோன்று, ஐரோப்பிய நாடுகளும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படாத சூழல் காணப்படுகிறது. டிரம்ப்பின் இந்த முடிவால் ஐரோப்பிய நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. இந்த சூழலில், பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தலைமையில் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் பாரீஸ் நகரில் நடந்துள்ளது. இதுபற்றி மேக்ரான் வெளியிட்டு உள்ள டுவிட்டர் பதிவில், ஐரோப்பிய தலைவர்கள் பலரை ஒன்றிணைத்து கொண்டு வந்து, உள்ளேன். அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோருடன் நான் பேசியிருக்கிறேன்.
உக்ரைனில் வலுவான மற்றும் நீண்டகால அமைதி வேண்டும் என கேட்கிறோம். இதனை அடைவதற்கு, காரணமேயின்றி போர் செய்யும் போக்கை ரஷியா நிறுத்த வேண்டும். அதனுடன், உக்ரைன் மக்களுக்கு வலிமையான மற்றும் நம்பத்தக்க பாதுகாப்பு உத்தரவாதங்களும் அளிக்கப்பட வேண்டும். அப்படி இல்லையெனில், மின்ஸ்க் ஒப்பந்தங்கள் போன்று இந்த போர் நிறுத்த ஒப்பந்தமும் முடிந்து போகும் ஆபத்து உள்ளது. இந்த விவகாரத்தில் ஐரோப்பியர்கள், அமெரிக்கர்கள் மற்றும் உக்ரைனியர்கள் அனைவருடனும் இணைந்து பணியாற்றுவோம் என்று அவர் தெரிவித்து உள்ளார்.