விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் இன்று 2ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 2ம் ஆண்டு தொடக்க விழா சென்னை மாமல்லபுரம் பூஞ்சேரி பகுதியிலுள்ள தனியார் சொகுசு விடுதியில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய தவெக தலைவர் விஜய், ஆளும் திமுக அரசையும், மத்திய அரசசையும் கடுமையாக விமர்சித்து இருந்தார்.கல்வி நிதி விவகாரத்தில் எல்கேஜி, யூகேஜி பிள்ளைகள் போல் சண்டையிடுகிறார்கள். எல்கேஜி, யூகேஜி பிள்ளைகள் போல் சண்டை, வாட் ப்ரோ இட்ஸ் வெறி ராங் ப்ரோ. திமுக, பாஜகவின் ஏமாற்று வேலைகள் குறித்து மக்களுக்கு நன்றாகவே தெரியும். சமூகவலைதளத்தில் ஹேஷ்டேக் போட்டு விளையாடிக்கொண்டிருக்கின்றனர். முன்பு பண்ணையார்கள் பதவியில் இருப்பார்கள். இப்போது பதவியில் இருப்பவர்கள் பண்ணையார்களாக மாறிவிடுகிறார்கள். நமது கட்சி பண்ணையார்களுக்கான கட்சி அல்ல என்று கடுமையாக விமர்சனம் செய்தார். இதனையடுத்து விஜய்க்கு பதிலடி கொடுக்கும் விதமாக திமுக செய்தித்தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தி திணிப்பை திமுக பன்னெடுங்காலமாக எதிர்த்து வருகிறது. விஜய்யின் அரசியல் அறிவு அவ்வளவுதான். திமுகவில் யாரும் பண்ணையார் ஆகவில்லை. சிறை செல்ல தயாராக இருக்கிறோம். நாங்கள் வீட்டுக்குள் இருப்பவர்கள் அல்ல. களத்தில் இருப்பவர்கள். 1938-ம் ஆண்டு சென்னை மாகாணத்தில் நீதி கட்சி ஆட்சி போய் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தபோது இந்திமொழி திணிக்கப்பட்டது. அப்போதே அன்றைக்கு தமிழ் அறிஞர்கள் அனைவரும் இந்திக்கு எதிராக திராவிட கழக தலைவர்கள் அனைவரும் இந்திக்கு எதிராக போராட்டத்தை நடத்தி திருச்சியில் இருந்து சென்னை வரை நடந்தே வந்து மக்களிடம் கருத்தை பரப்பினார்கள் இதையெல்லாம் விஜய்க்கு தெரியாது. 1952-ல் மீண்டும் இங்கே முதல் தேர்தலில் ராஜாஜி ஆட்சிக்கு வந்த பிறகு இந்தி மொழி கற்பிக்கப்படும் என்ற அறிவித்தபோது அதையும் கடுமையாக எதிர்த்து போராடிய இயக்கம் திமுக இயக்கம். எனவே 1952-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிடவில்லை. திமுகவை பொருத்தவரை மக்களுக்காக கொள்கைக்காக போராடி இருக்கிறோமே தவிர தேர்தல் கூட எங்களுக்கு பின்னாடிதான். தேர்தல் பற்றி கூட நாங்கள் கவலைபட்டதில்லை. வெற்றி தோல்விக்கூட கவலைபடுபவர்கள் இல்லை. மக்களுக்காக, கொள்கைக்காக மக்கள் நலனுக்காக போராட வேண்டும் தொடர்ந்து போராடி வருகிற கட்சி திமுக. தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் பாஜக சொல்வது ஒன்று; செய்வது ஒன்று. இவ்வாறு அவர் கூறினார்.
