பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளா இன்றுடன் (புதன்கிழமை) நிறைவு பெறுகிறது. இதையடுத்து நிறைவு விழாவுக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூட்ட நெரிசலை தவிர்க்க நகருக்குள் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டதுடன், பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. உலக அளவில் ஒரே இடத்தில் அதிகளவில் மக்கள் கூடும் பிரமாண்ட திருவிழாவாக கருதப்படும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த ஜனவரி மாதம் 13-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி சாதுக்கள், துறவிகள், மடாதிபதிகள் உள்ளிட்டோர் பிரயாக்ராஜில் வந்து தங்கியுள்ளனர். தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் அலை அலையாக வந்து, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகிறார்கள். ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி மற்றும் வெளிநாட்டு தலைவர்கள், பிரதிநிதிகள், சினிமா பிரபலங்களும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். இதுவரை 65 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடியுள்ளதாக உத்தரபிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், உ.பி. அரசு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இன்று அதிகாலை 2 மணி வரை 11.66 லட்சம் பக்தர்களும், அடுத்த இரண்டு மணி நேரத்தில் 25.64 லட்சம் பக்தர்களும், காலை 6 மணி வரை 41,11 லட்சமும், அதேநேரத்தில் காலை 10 மணி வரை 81.09 லட்சம் பக்தர்களும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
