”பாராளுமன்றத்தில் ஜே .வி.பி.-தேசிய மக்கள் சக்தி கூட்டணிக்கு 159எம்.பி.க்கள் உள்ளனர். இவர்களில் 107 பேர் தேசிய மக்கள் சக்தியையும் 52 பேர் ஜே.வி.பியையும் சேர்ந்தவர்கள் .இதில் தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த 107எம்.பி.க்களில் பலர் கலாநிதி , பேராசிரியர் பட்டங்களை கொண்டவர்கள்.அதே போல் பெரிய நிறுவனங்கள் மற்றும் உயர் பதவிகளை வகித்து அதிக சலுகைகள், அதிக சம்பளத்துடன் பணியாற்றிய நிலையில் தற்போது தங்களுடைய எம்.பி. பதவிக்காக அவற்றை கைவிட்டுள்ளதுடன் எம்.பி.க்களுக்கு கிடைக்கும் சம்பளம், விசேட கொடுப்பனவுகள்,சலுகைகளையும் கட்சிக்கு தாரை வார்க்க வேண்டியேற்பட்டுள்ளதால் விரக்தியடைந்து சிலர் எம்.பி. பதவிகளிலிருந்து விலகுவது தொடர்பில் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர்”
கே.பாலா
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு ஆட்சிபீடம் ஏறிய சில மாதங்களுக்குள்ளேயே மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை ,ஏற்படுத்திய எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற எந்த வித நடவடிக்கைகளையும் எடுக்காததால் கட்சிக்கு வெளியே கடும் விமர்சனங்களையும் நெருக்கடிகளையும் எதிர்கொண்டுவரும் நிலையில் தேர்தல் காலத்தில் தமது கட்சி தொடர்பில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியதால் கட்சிக்குள்ளும் முரண்பாடுகளையும் எதிர்ப்புக்களையும் எதிர் கொண்டுள்ளதுடன் ”புது மாப்பிள்ளைகள்”போல் அமைச்சர்கள் சிலர் செய்யும் அலப்பறைகள்,அனுபவமற்ற பேச்சுக்கள் ,செயற்பாடுகளினாலும் அநுரகுமார அரசு கடும் கிண்டல் கேலிகளுக்கும் உள்ளாகி வருகின்றது.
தற்போது ஆட்சிபீடம் ஏறியுள்ள தேசிய மக்கள் சக்தி அரசின் அமைச்சர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அனைத்து சலுகைகளும் ஏற்கனவே தேர்தல்காலத்தில் மக்களுக்கு வழங்கபட்ட வாக்குறுதிகளுக்கமைய இல்லாமலாக்கப்பட்டுள்ளமையால் ஏற்பட்டுள்ள அதிருப்தியில் 15 தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை விட்டு செல்வதற்கு தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது.ஜே.வி.பி. மற்றும் தேசிய மக்கள் சக்திக்கிடையே சமீப காலங்களாக ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு மத்தியில், இவ்விடயம் ஜே.வி.பி.யின் அரசியல் தலைமைக்குழுவுக்கும் தேசியமக்கள் சக்தியின் தலைமைப்பீடத்திற்கும் நெருக்கடியை,குழப்பத்தை முரண்பாட்டை, பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாராளுமன்றத்தில் மக்கள் விடுதலை முன்னணி ( ஜே .வி.பி.) தேசிய மக்கள் சக்தி கூட்டணிக்கு (என்.பி.பி.)159 ஆசனங்கள் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், இவற்றில் 107 பேர் தேசிய மக்கள் சக்தியையும் 52 பேர் நேரடியாக ஜே.வி.பியையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.எனினும் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் 107 பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் கலாநிதி பட்டம் மற்றும் பேராசிரியர் பட்டங்களை வகிப்பவர்கள். அதே போல் பெரிய நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களில் உயர் பதவிகளை வகித்து அதிக சலுகைகள் மற்றும் அதிக சம்பளத்துடன் பணியாற்றிய நிலையில் தற்போது தங்களுடைய பாராளுமன்ற உறுப்புரிமைக்காக அவற்றை கைவிட்டுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தங்களது பாராளுமன்ற உறுப்பினர்கள் சம்பளம், சலுகைகள், வாகனங்கள், எரிபொருள், ஊழியர்கள் போன்றவற்றைப் பெற மாட்டார்கள் என தேர்தல் காலத்தில் மக்களுக்கு வாக்குறுதியளித்துள்ளமையால், அவர்கள் இப்போது அதைப் பெற முடியாது சிரமப்படுகின்றார்கள். முழுநேர ஜே.வி.பி உறுப்பினர்கள் அத்தகைய சலுகைகள் இல்லாமல் வாழ முடிந்தாலும், உயர்மட்ட சம்பளம், வேலைகள் மற்றும் சலுகைகளை ஒதுக்கி வைத்துவிட்டு பாராளுமன்றத்திற்கு வந்த ஒரு குழுவினருக்கு இது இப்போது ஒரு பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது.
அதுமட்டுமல்ல தேசிய மக்கள் சக்தி அரசின் ஜனாதிபதி பிரதமர் , அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளங்கள் கூட ஜே .வி.பி. கட்சியின் கணக்கிற்கே செல்கின்றன. உதாரணமாக ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு அடிப்படை சம்பளமாக 54500 ரூபாவும் பிரதி அமைச்சர்களுக்கு 65000 ரூபாவும் அமைச்சர்களுக்கு 85000 ரூபாவும் என நிர்ணயிக்கப்பட்டுள்ள போதும் அவர்களுக்கான விசேட கொடுப்பனவுகளை உள்ளடக்கி ஒவ்வொருவரும் 3 இலட்சம் ரூபாமுதல் 4 இலட்சம் ரூபா வரை பெற்று வந்த நிலையில் இவர்களின் அடிப்படைச் சம்பளம் மட்டுமே பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதி அமைச்சர்கள், அமைச்சர்களுக்கு வழங்கப்படுவதுடன் மிகுதி பெரும் தொகையான கொடுப்பனவுகள் ஜே .வி.பி. கட்சியின் கணக்கிற்கே செல்கின்றன.
இதற்கமைய பாராளுமன்றத்தில் மக்கள் விடுதலை முன்னணி ( ஜே .வி.பி.) தேசிய மக்கள் சக்தி கூட்டணிக்கு (என்.பி.பி.)159 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ள நிலையில் ஒரு மாதத்தில் மட்டும் 4 கோடி ரூபாவுக்கு மேல் ஜே .வி.பி. கட்சியின் கணக்கிற்கே செல்வதால் ஜே .வி.பி. பணக்கார கட்சியாக விஸ்வரூபமெடுத்து வருகின்றது.பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் ,விசேட கொடுப்பனவுகளை மக்கள் சேவைக்கு, அபிவிருத்திக்கு வழங்காது ஜே .வி.பி.கட்சியின் பணமாக்கி வருவது ஜே.வி.பி.-தேசியமக்கள் சக்தி கூட்டுக்குள் முரண்பாடுகளை ,வெறுப்புக்களை ஏற்படுத்தியுள்ளதுடன் மக்கள் மத்தியிலும் விவாதங்களையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தி வருகின்றது
இவ்வாறான நிலையில்தான் சம்பளம், வாகனங்கள், எரிபொருள் மற்றும் சிறப்புரிமைகள் உள்ளிட்ட சலுகைகள் இல்லாமல் ஐந்து ஆண்டுகள் பாராளுமன்ற உறுப்பினர்களாக தொடர்ந்து பதவி வகிப்பதா அல்லது பாராளுமன்றத்தை விட்டு வெளியேறி, தங்களுடைய முன்னைய பணியையே தொடர்வதா என்பது குறித்து அவர்கள் தற்போது மதிப்பீடு செய்து வருகின்றனர். தற்போது அந்த விவாதம் உச்சத்தை எட்டியுள்ளமையால் விரைவில் ஒரு குழுவினர் தேசிய மக்கள் சக்தி அரசிலிருந்து வெளியேறுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.இவ்வாறான நிலையை எதிர்கொள்ள மறுபுறும் தங்களது பதவிகளை இராஜிநாமா செய்யும் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு முழுநேர ஜே.வி.பி உறுப்பினர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதுடன், அதன் மூலம் தற்போது 52 ஆக இருக்கும் முழுநேர ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது
இவ்வாறு தேசியமக்கள் சக்தியின் திசைகாட்டியினுள் எம்.பி.க்கள் சிலர் திசைமாறத் தொடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில் இலங்கையில் அரிசித் தட்டுப்பாடும் தேங்காய் விலையும் நாட்டையும் மக்களையும் வதைப்பதுடன்அது தற்போதைய அரசியலிலும் தாக்கம் செலுத்தி, எதிர்க்கட்சிகளின் பிரசார ஆயுதங்களாகி அநுரகுமார அரசை பாடாய்படுத்தத் தொடங்கியுள்ளது. இதனால் திணறும் ஆட்சியாளர்களான ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் அரிசி,தேங்காய் தட்டுப்பாடுகளுக்கு கூறும் ”விதித்தரமான”காரணங்கள் அநுரகுமார அரசின் ஆற்றலையும் ”கல்விமான்கள்”நிறைந்த அரசு என்ற பெருமையையும் கேள்விக்குட்படுத்தியுள்ளதுடன் கேலிக்கும் உள்ளாக்கி வருகின்றது
நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசித்தட்டுப்பாட்டுக்கு வர்த்தக, வாணிப , உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அமைச்சர் வசந்த சமரசிங்க ” 2024 ஆம் ஆண்டில் முந்தைய அரசாங்கம் செய்த சில முட்டாள்தனமான செயல்களால் தான் இன்று சிவப்பு அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது .கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு 20 கிலோ சிவப்பு அரிசி மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. சிவப்பு அரிசி சாப்பிடாத மக்களுக்கு சிவப்பு அரிசி வழங்கப்பட்டால், அரிசி பற்றாக்குறை ஏற்படும் என சிந்தித்திருக்க வேண்டும்.அப்போது, 20 கிலோ சிவப்பு அரிசியை எடுத்து, வௌ்ளை அரிசியை சமைத்து சாப்பிடுபவர்களுக்கும் கொடுத்து, அதையும் சாப்பிடச் சொன்னார்கள். அதனால்தான் சிவப்பு அரிசி பற்றாக்குறை ஏற்பட்டது என்று காரணம் கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாது கோழிகளுக்கு தீவனமாக அரிசியையும் பலர் பாவிப்பதும் தட்டுப்பாடுகளுக்கு காரணம் .அரிசியை கோழிகள் அதிகமாக உண்பதனால்தான் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் கோழிகளின் முட்டையின் மஞ்சள் கருவும் வெள்ளைக் கருவாக மாறியுள்ளதாகவும் அவர் உதாரணமும் கூறுகின்றார்.இதேவேளை அரிசித்தட்டுப்பாட்டுக்கு ஒரு கையொப்பத்தில் தீர்வு காண முடியும் என அரசைபொறுப்பேற்க முன்னர் கூறியிருந்த தேசியமக்கள் சக்தியின் தலைவர்களில் ஒருவரும் தற்போதைய அமைச்சருமான சுனில் ஹந்துன்னெத்தி இப்போது நாட்டில் நிலவி வரும் அரிசித் தட்டுப்பாட்டு பிரச்சினைக்கு தீர்வு காண்பது சுலபமான காரியம் அல்ல எனக் கூறுகின்றார். ஒரு கையொப்பத்தின் மூலம்அரிசித் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண முடியும் என ஒரு பேச்சுக்கே தாம் கூறியதாகவும் எனினும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பது சவால் மிக்கது எனவும் தற்பொழுது குறிப்பிட்டுள்ளார்.
இதேபோன்று நாட்டில் ஏற்பட்டுள்ள தேங்காய் தட்டுப்பாட்டுக்கும் கடுமையான விலையேற்றத்துக்கு மக்கள் வீடுகளில் ”தேங்காய்ப்பால்”பிழிவதும் பால்சொதி ”வைப்பதும் ”தேங்காய் சம்பல்”செய்வதும்தான் காரணமென கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்து மக்களின் கிண்டலுக்கும் விசனத்துக்கும் ஆளாகியுள்ளார். நாட்டில்நாம் இவ்வளவு காலமும் ”பால்சொதி ‘யும் ”தேங்காய் சம்பலும் ”சாப்பிடாமலா இருந்தோம்.திடீரென சாப்பிடத்தொடங்கியதால்தான் இவற்றுக்கு தட்டுப்பாடும் விலை அதிகரிப்பும் ஏற்பட்டதாக காரணம் கூறும் பிரதி அமைச்சர் சந்திரமண்டலத்திலிருந்தா இலங்கை வந்துள்ளார் எனவும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இது போதாதென்று இலங்கையில் பயிர் செய்கைகளுக்கு சேதம் விளைவிக்கும் வன மிருகங்களை கணிப்பிடும் நடவடிக்கையை 5 நிமிடங்களில் நடத்த அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை பல்வேறு தரப்பினரும் விமர்சித்து கிண்டலடித்து வருகின்றனர்.நாடு முழுவதும் உள்ள கிராம சேவையாளர் பிரிவுகளில் இந்த நடவடிக்கை எதிர்வரும் 15ஆம் திகதி இடம்பெறும் ”குரங்கு, மர அணில், மயில் போன்றவற்றை கணக்கெடுப்பதற்காக ஐந்து நிமிடங்கள் வழங்கப்படும். கிராம சேவையாளர் பிரிவுகளிலுள்ள அனைத்து அதிகாரிகளும் இந்த நடவடிக்கைகளில் தொடர்புப்படுவார்கள். ஐந்து நிமிடங்களுக்குள் தமது தோட்டத்தில் எத்தனை குரங்குகள் இருந்தன, எத்தனை மர அணில்கள் இருந்தன, எத்தனை மயில்கள் இருந்தன, வேறு மிருகங்கள் இருந்தனவா என்பதை தோட்ட உரிமையாளர்கள் கணிப்பிட வேண்டும். இதற்காக ஐந்து நிமிடங்கள் வழங்கப்படும். என விவசாய மற்றும் மிருக வன பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளமை அநுர அரசை பலரும் கிண்டலடிக்க காரணமாகியுள்ளது.
இவ்வாறு படித்து பட்டம் பெற்றாலும் ஆட்சி செய்த அனுபவமின்றி அமைச்சர்கள் முட்டாள்கள் போன்று அல்லது மக்களை முட்டாள்களாக நினைத்து கருத்துக்களை கூறி அநுரகுமார அரசின் ”கல்விமான்கள் அதிகம் உள்ள அரசு”என்ற விம்பத்தை உடைத்து ”அரசியல் கோமாளிகள் ”உள்ள அரசு என்ற விமர்சனத்தை உருவாக்கிவரும் நிலையில் ,சிறப்பு சலுகைகளை அனுபவிக்க மாட்டோம் ,வாகன அனுமதிக்கான பெர்மிட் பெற மாட்டோம் , ஆடம்பர செலவுகளை செய்ய மாட்டோம், எமது சம்பளங்களை,விசேடகொடுப்பனவுகளை கட்சிக்கே வழங்குவோம் எனத் தேர்தல் காலத்தில் வெற்றி பெறுவதற்காக தெரியாத்தனமாக கொடுத்த வாக்குறுதிகளினால் தற்போது அநுரகுமார அரசிலுள்ள சில அமைச்சர்கள்,எம்.பி.க்கள் திசைகாட்டியின் திசைக்கு மாறாக அரசிலிருந்து விலகும் முடிவுக்கு வந்துள்ளமையும் அநுரகுமார அரசுக்கு பெரும் உள்ளக நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது