சிங்கப்பூரில் இந்தியர் ஒருவர் பக்கத்து வீட்டில் புகுந்து, கணவருடன் படுக்கையில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்த குற்றத்திற்காக 7 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் எரக்கோடன் அபின்ராஜ் (வயது 26) என்பவர் அதிகாலை 4.50 மணியளவில் பக்கத்து வீடு ஒன்றிற்குள் ஏறி உள்ளே சென்றுள்ளார். பால்கனி வழியே வீட்டுக்குள் புகுந்துள்ளார். அந்த வீட்டில் இருந்த 36 வயது பெண் படுக்கை அறையில் கணவருடன் தூங்கி கொண்டு இருந்திருக்கிறார். அவருடைய மகள் வேறொரு அறையில் இருந்திருக்கிறார்.
அபின்ராஜ், அந்த பெண்ணை பார்த்ததும், அவரை தகாத முறையில் தொட்டு பாலியல் தொல்லை அளித்திருக்கிறார். யாரோ தொடும் உணர்வு ஏற்பட்டதும், அந்த பெண் அதிர்ச்சியடைந்து எழுந்திருக்கிறார் என சேனல் நியூஸ் ஆசியா வெளியிட்ட செய்தி தெரிவிக்கின்றது. டார்ச் லைட் உதவியுடன் அபின்ராஜின் மொபைல் போனை அந்த பெண் பறித்து இருக்கிறார். இதன்பின் பெண்ணின் சத்தம் கேட்டு அருகே படுத்திருந்த கணவர் விழித்திருக்கிறார். அவர் அபின்ராஜை பார்த்து அதிர்ச்சியடைந்து, அறையை விட்டு வெளியேறும்படி கூறியிருக்கிறார். இதில், பயந்து போன அபின்ராஜ் அந்த அறையிலேயே சிறுநீர் கழித்திருக்கிறார். காவல்துறைக்கு போக வேண்டாம் என கெஞ்சி கேட்டிருக்கிறார். இந்த தகவல் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. எனினும், அந்த பெண் காவல்துறையை அழைத்திருக்கிறார். காவல்துறை வந்ததும், அத்துமீறி உள்ளே வந்த விசயங்களை அந்நபர் ஒப்பு கொண்டபோதும், பெண்ணை தொடவில்லை என்றும் மொபைல் போன் அந்த பெண் மீது விழுந்து விட்டது என்றும் அதனால் அவர் எழுந்து விட்டார் என்றும் கூறியிருக்கிறார். இந்த வழக்கில் நீதிமன்றம் அபின்ராஜுக்கு 7 மாத சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்காக, அபின்ராஜுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் மற்றும் சவுக்கடியும் தண்டனையாக வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.