சோழிங்கநல்லூரில் உயர்தர மின் மேலாண்மை கருவிகள் உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான மையம் அமைப்பதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் 39 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் போரூரில் டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஈரநில பசுமை பூங்கா, கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகம் மற்றும் சாத்தாங்காடு இரும்பு மற்றும் எஃகு சந்தை வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டுப் பணிகளை திறந்து வைத்து, 70 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 10 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார். மேலும், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமெரிக்காவைச் சேர்ந்த ஈட்டன் குழுமத்தின் துணை நிறுவனமான, ஈட்டன் எலக்ட்ரிக் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 200 கோடி ரூபாய் முதலீட்டில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சென்னை சோழிங்கநல்லூரில் உயர்தர மின் மேலாண்மை கருவிகள் உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான மையம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார்.