பிரிட்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று லண்டனில் நடந்த கலந்துரையாடலில் பங்கேற்றார். அப்போது பாகிஸ்தான் செய்தியாளர் ஒருவர், “நான் இப்போது ஜெய்சங்கரை கொஞ்சம் பதற்றப்பட வைக்கப்போகிறேன்” எனக் கூறி காஷ்மீர் தொடர்பாக கேள்வி எழுப்பினார். “காஷ்மீரை இந்தியா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது. காஷ்மீர் மக்கள் ஆயுதம் ஏந்தி எதிர்த்து நிற்கின்றனர். காஷ்மீரில் 70 லட்சம் மக்கள் உள்ளனர். இவர்களை கட்டுப்படுத்த 10 லட்சம் ராணுவ வீரர்களை குவித்து இருக்கிறீர்கள். பிரதமர் மோடி தனது நண்பரான அமெரிக்க அதிபர் டிரம்புடன் பேசி காஷ்மீர் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவாரா?” என்று அந்த செய்தியாளர் கேள்வி கேட்டார். இந்த கேள்விக்கு பதிலளித்த ஜெய்சங்கர், “காஷ்மீர் பிரச்சினைகளை தீர்ப்பதில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது. முதல்படியாக காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கி உள்ளது. 2-வது நடவடிக்கையாக காஷ்மீரின் வளர்ச்சி, பொருளாதார திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சமூக நீதியை மீட்டெடுத்துள்ளது. 3-வது நடவடிக்கையாக அதிக ஓட்டு பதிவாகும் வகையில் தேர்தலை நடத்தி முடித்துள்ளது. இன்னும் ஒரே ஒரு விவகாரம் மட்டும்தான் தீர்க்கப்படாமல் உள்ளது. அந்த பிரச்சினை இப்போது இந்தியாவுக்கு வெளியே உள்ளது. அதுதான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்னும் திருடப்பட்ட காஷ்மீர். அதை மட்டும் மீட்டு கொண்டு வந்துவிட்டால் மொத்த காஷ்மீர் பிரச்சினையும் தீர்க்கப்பட்டு விடும் என உங்களிடம் உறுதி அளிக்கிறேன்” என்று ஜெய்சங்கர் அதிரடியாக கூறினார்.
