தெற்காசியாவிலேயே முதலீடு மேற்கொள்ள சிறந்த மாநிலம் தமிழ்நாடு தான் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், பையனூர் சிப்காட்டில் ரூ.515 கோடி முதலீட்டில் உலகத் தரம் வாய்ந்த கோத்ரேஜ் உற்பத்தி தொழிற்சாலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று திறந்து வைத்தார். பின்னர் தொழிற் சாலையை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு பணிபுரியும் பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை யொட்டி மாமல்லபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலைகளில் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு திமுக கொடி வைக்கப்பட்டிருந்தது. கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள், ஏராளமானோர் சாலைகளில் நின்று முதலமைசசர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு தெரிவித்தனர். தொடர்ந்து விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகையில், “இந்தியாவின் 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கிய பங்காற்றி வருகிறது. தெற்காசியாவிலேயே முதலீடு மேற்கொள்ள சிறந்த மாநிலம் தமிழ்நாடுதான். ரூ.515 கோடி முதலீட்டில் அமைக்கப்படும் கோத்ரேஜ் ஆலை மூலம் 1,000 பேருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும்.
தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது அனைவருக்கும் உள்ளடங்கிய சமூகநீதிக்கான வளர்ச்சி. 2030ம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் கோடி டாலர் பொருளாதார இலக்கை அடைவோம்” என்று தெரிவித்துள்ளார்.