தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. சட்டசபையில் கூடிய முதல் நாள் கூட்டத்தில் 2025-2026-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த நிலையில், தமிழக பட்ஜெட் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதாக அறிவித்தனர்; அந்த அறிவிப்பு என்ன ஆனது?. ஆட்சிக்கு வந்ததும் பெட்ரோல் ரூ.3 குறைக்கப்பட்டது; ஆனால் டீசல் விலை குறைக்கப்படவில்லை. பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்து எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டவை அதிமுகவின் திட்டங்கள். மாதம்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை குறித்து பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை. ரேஷனில் 1 கிலோ சர்க்கரை கூடுதலாக வழங்கப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது?. நீட் தேர்வு ரத்து, அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் , கல்வி கடன் ரத்து குறித்த எந்த அறிவிப்பும் இல்லை. 100 நாள் வேலை திட்ட ஊதியத்தை உயர்த்துவதாக தெரிவித்தார்கள் இடம் பெறவில்லை. நெல், கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்துவதாக தெரிவித்திருந்தனர், இடம்பெறவில்லை சமையல் எரிவாயு மானியம் வழங்குவதாக தெரிவித்தனர், அதுவும் இடம்பெறவில்லை. புதிய பேருந்துகள் வாங்க ரூ.3,000 கோடி என்பது வெற்று அறிவிப்பு. அரசு பணியிடங்களை நிரப்புவதாக தேர்தல் வாக்குறுதி அளித்தனர். ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 50,000 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்பட்டன; ஓராண்டில் 40,000 இடங்களை நிரப்ப முடியுமா?. விளம்பரத்தை மட்டுமே முன்னிலைப்படுத்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி நடத்தி வருகிறார்.
2026 தேர்தலில் வாக்குகளை பெறுவதற்காக அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். தமிழ்நாடு கடனில் தத்தளிக்கிறது; ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு நிதி இல்லை; நடைமுறையில் பல திட்டங்களுக்கே கடன் வாங்கித்தான் திட்டத்தை செயல்படுத்த வேண்டிய நிலை உள்ளது. நிர்வாகத் திறமையற்ற அரசு நடக்கிறது என்பதே எதார்த்த உண்மை. அதிக கடன் வாங்குவதில் முதல் மாநிலமாக தமிழகம் இருக்கும் நிலையில் எப்படி புதிய திட்டங்களை செயல்படுத்துவார்கள்?. பட்ஜெட் அறிவிப்பு, வெறும் வெற்று அறிவிப்பாகத்தான் உள்ளது; இது ஒரு விளம்பர பட்ஜெட். இவ்வாறு அவர் கூறினார்.