“யுத்த காலங்களில் எந்தச் சேவையும் இல்லாத காலத்தில் மிகவும் திறைமையாக பணிபுரிந்த அதிகாரிகள். இப்போது ஒரு வீதம்கூட இல்லை.யுத்த காலங்களில் வாகனம், போக்குவரத்து, தொழில்நுட்பம், தொலைத் தொடர்புகள் ஆகிய வசதிகளற்ற நிலையில் அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் தங்களுடைய சேவைகளை மிகவும் திறம்படச் செய்தார்கள். இப்போது அனைத்து வசதிகள் இருந்தும் மக்களை நாய் போன்று வழி நடத்துவது மிகவும் மன வேதனை அளிக்கின்றது…”
இவ்வாறு தெரிவித்திருப்பவர் வடமாகாண ஆளுநர் வேதநாயகன். கிளிநொச்சியில் கல்வி அறக்கட்டளை நிகழ்வில் கலந்து கொண்டு இவ்வாறு. தெரிவித்துள்ளார். அவர் பேசிய பேச்சின் ஒரு பகுதி இது. அண்மை மாதங்களாக அவர் இது போன்று பல பேச்சுக்களை ஆற்றி வருகிறார். தனது நிர்வாகத்தின் கீழ்வரும் அரசு அலுவலகங்கள் தொடர்பாக அவர் வெளிப்படையாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.
அவர் ஓர் ஆளுநர்.யாழ். மாவட்டத்தின் அரச அதிபராக இருந்தவர். அரச அலுவலகங்களில் என்ன நடக்கிறது என்பது அவருக்கு நன்கு தெரியும். இப்பொழுது ஒற்றை ஆட்சிக் கட்டமைப்பின் ஆளுநர் என்ற அடிப்படையில் அவருக்கு நிறைவேற்று அதிகாரம் உண்டு. தற்துணிவு அதிகாரங்களும் உண்டு. அப்படியென்றால் அவருடைய நிர்வாகத்தின் கீழ் வரும் அரச கட்டமைப்பின் தவறுகளைச் சீர் செய்யும் விதத்தில் தற்துணிவுவான முடிவுகளை எடுத்து ஏன் அமல்படுத்தக் கூடாது? அப்படிச் செய்யாமல் ஒரு முறைப்பாட்டுக்காரர் போல அவர் தொடர்ச்சியாக ஏன் அரச அலுவலகங்களை நோக்கி குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றார்?
இதைப் போலத்தான் யாழ். பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரும் சில விடயங்களில் நடந்து கொள்கிறார். வேந்தர் என்றால் அரசர். அவருக்கும் நிறைவேற்று அதிகாரங்களும் தற்துணிவு அதிகாரங்களும் உண்டு. அவரும் ஒரு பகிரங்க மேடையில் பல்கலைக்கழகத்தில் நிகழும் பாலியல் முறைகேடுகள் தொடர்பாக சில விடயங்களை பேசியிருக்கிறார். அவர் ஒரு துணை வேந்தர் அவர் நினைத்தால் தனது நிர்வாகத்துக்கு உட்பட்ட விரிவுரையாளர்களை கட்டுப்படுத்த முடியும். அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்க முடியும். ஆனால் அவ்வாறெல்லாம் செய்யாமல் பொது மேடைகளில் முறைப்பாடு செய்பவராக அவர் மாறியது ஏன்?
யார் யாரெல்லாம் குறிப்பிட்ட ஒரு விடயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டுமோ,அவர்களே முறைப்பாட்டுக்காரர்களாக மாறி நின்று முறைப்பாடுகளைப் பகிரங்கமாக முன் வைப்பதை எப்படிப் பார்ப்பது?
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பொறுப்புள்ள அமைச்சரான சந்திரசேகரனும் அப்படித்தான் நடந்து கொள்கிறார். வட மாகாண அரச விவகாரங்களுக்கு ஒரு விதத்தில் அவர்தான் பொறுப்பு. வட மாகாணத்தில் தேசிய மக்கள் சக்தியைக் கட்டியெழுப்பியது அவர்தான். ஆனால் அவர் அண்மையில், பிரதமர் ஹரிணி யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்தபொழுது, மானிப்பாயில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசுகையில் என்ன சொன்னார்? அநாதை இல்லங்களில் வாழும் பெண்களைப் விபசாரத்துக்குப் பயன்படுத்துவதாக முறைப்பாடுகள் கிடைத்திருக்கிறதாம். அந்தப் பேச்சில் அவர் மேடையில் பயன்படுத்தக்கூடாத வார்தையைப் பயன்படுத்தியிருந்தார். பெண்கள் பராமரிக்கப்படும் சில இல்லங்களில் பெண்கள் துஸ்பிரயோகம் செய்யப்படுவதாகப் பொருள் கொள்ளத்தக்க விதத்தில் அவருடைய பேச்சு அமைந்திருந்தது.அவர் ஒரு பொறுப்பு வாய்ந்த அமைச்சர்.நிறைவேற்று அதிகாரமும் தற்துணிவு அதிகாரமும் உடையவர். குறிப்பிட்ட பெண்கள் இல்லத்தில் அவ்வாறு துஷ்பிரயோகம் இடம்பெற்றிருந்தால் அது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அமைச்சுக்கு அறிவிக்க வேண்டியவர் அவர். ஒரு அமைச்சராக, தற்துணிவு அதிகாரம் உடையவராக, அவர் நினைத்தால் இந்த விடயத்தில் தற்துணிவுவோடு தலையிட்டு குறிப்பிட்ட இல்லங்களில் நடக்கக்கூடிய முறைகேடுகளை முடிவுக்கு கொண்டு வரலாம்.
அவர் அவ்வாறு பேசிய அதே காலப்பகுதியில், மற்றொரு பேச்சில் யாழ்ப்பாணம் இப்பொழுது அதிகம் குடிப்பவர்களைக் கொண்ட ஒரு மாவட்டம் என்று குற்றம் சாட்டியிருந்தார். இருக்கலாம். அதே சமயம் யாழ்ப்பாணத்தில் குடி பானங்களை நுகரும் படைத்தரப்பினரின் எண்ணிக்கையும் அதற்குள் அடங்குமா இல்லையா என்பதனை அவர் தெளிவுபடுத்த வேண்டும். ஏனென்றால் யாழ்ப்பாணத்தின் நிலை கொண்டிருக்கும் படையினரின் எண்ணிக்கையானது அங்குள்ள ஜனத்தொகையோடு ஒப்பிடுகையில் அளவுப் பிரமாணத்துக்கு அதிகமானது என்பதனை கொழும்பை மையமாகக் கொண்ட ஆராய்ச்சி நிறுவனங்களே வெளிப்படுத்தியுள்ளன. எனவே யாழ்ப்பாணத்தில் குடிப்பவர்களின் எண்ணிக்கை என்று பார்க்கும்பொழுது அதற்குள் படையினரும் அடங்குவார்களா? இல்லையா? என்பதனை அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும். மேலும் இந்த விடயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு உண்டு. ஏனென்றால் அவர்தான் யாழ்ப்பாண விவகாரங்களை கையாண்டு வருகிறார். முடிவெடுக்கும் அதிகாரத்தைக் கொண்ட ஒரு அமைச்சர் முடிவை எடுக்காமல் ஏன் முறைப்பாடு செய்கிறார்?
அப்படித்தான் அரசுத் தலைவர் அனுரவும் வடமகாணத்துக்கு வரும் நிதி செலவழிக்கப்படாமல் திரும்பிச் செல்கிறது என்ற பொருள்பட யாழ்ப்பாணத்தில் வைத்து உரையாற்றியிருந்தார். நாட்டில் மாகாண சபை உள்ளூராட்சி சபைகளில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் இப்பொழுது இல்லை. அங்கெல்லாம் அதிகாரிகளின் ஆட்சிதான் நடக்கின்றது. இந்த அதிகாரிகள் அரச நிர்வாகக் கட்டமைப்பின் ஒரு பகுதியினர்.எனவே தமது நிர்வாகக் கட்டமைப்பின் ஒரு பகுதியாகக் காணப்படும் அரசு அதிகாரிகளை ஏவி ஒரு மாவட்டதுக்கு வழங்கப்பட்ட நிதி முழுமையாக, விரைவாக செலவழிக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு நிறைவேற்று அதிகாரம் உடைய ஒரு ஜனாதிபதிக்கு உண்டு.விக்னேஸ்வரனின் காலத்தில் நிதி திருப்பி அனுப்பப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை விக்னேஸ்வரன் ஏற்கனவே மறுத்துவிட்டார். விக்னேஸ்வரனுக்கு பின்னரான காலகட்டத்தில் நிதி திருப்பி அனுப்பப்பட்டு இருந்தால் அதற்கு கொழும்பில் உள்ள மத்திய அரசாங்கம்தான் பொறுப்பு.
நிறைவேற்று அதிகாரமுடைய ஒரு ஜனாதிபதி யாரைக் குற்றம் சாட்டுகிறார்? ஒற்றையாட்சிக் கட்டமைப்பின் நிறைவேற்று அதிகாரம் உடைய ஜனாதிபதி என்ற அடிப்படையில் அவருடைய நிறைவேற்று அதிகாரத்தின் ஒரு பகுதியாகக் காணப்படும் அரசு அலுவலகங்களை அவர் குற்றம் சாட்ட வேண்டுமா? அல்லது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி நிலைமையைச் சீராக்க வேண்டுமா? ஒரு நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி இங்கே முறைப்பாட்டுக்காரராக மாறியது எப்படி?
அவர் மட்டுமல்ல அவருடைய நாடாளுமன்றத்தில் காணப்படும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாங்கள் ஆளுங்கட்சி என்பதை மறந்து எதிர்க்கட்சிகளைப் போல முறைப்பாடு செய்கிறார்கள். குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் பொழுது தமிழ்ப் பகுதிகளில் போதைப் பொருள் பாவனை குறித்து சுட்டிக்காட்டுகிறார்கள்.போதைப்பொருள் பாவனை; போதைப்பொருள் வலைப் பின்னல் தொடர்பாக தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரச படைத்தரப்பையும் காவல்துறையையும் குற்றம்சாட்டுகிறார்கள். தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதை வெளிப்படையாகச் செய்யவில்லை. ஆனால் அவர்களும் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது முறைப்பாட்டுக்காரர்களாகத்தான் தெரிகிறார்கள். ஆனால் அவர்கள்தான் அரசாங்கம். மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்ட அரசாங்கத்தின் உறுப்பினர்கள் அவர்கள். அதுதொடர்பாக நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டுமே தவிர, எதிர்க்கட்சிகளைப் போல நாடாளுமன்றத்தில் போய் நின்று முறைப்பாடு செய்து கொண்டிருக்க முடியாது.
மேற் கூறப்பட்டவற்றைத் தொகுத்துப் பார்த்தால் என்ன தோன்றுகிறது? யாரிடம் நிறைவேற்று அதிகாரம் அல்லது தற்துணிவு அதிகாரம் உண்டோ, அவர்கள் எல்லாரும் முறைப்பாட்டுக்காரர்களாக மாறுகிறார்கள்.
குறிப்பாக ஆளுநர் குற்றஞ்சாற்றுவது தமிழ் நிர்வாக அதிகாரிகளையும் தமிழ் அரசு அலுவலர்களையும்தான். இவ்வாறு அரசு அலுவலர்களைக் குறை கூறுவது அல்லது அவர்களைக் குற்றவாளிகளாகக் காட்டுவது என்பது மருத்துவர் அர்ஜுனாவின் எழுச்சிக்குப் பின் மேலோங்கி வரும் ஒரு போக்கு. ஆனால் அர்ஜுனா குற்றச்சாட்டுவது என்பது வேறு, அதையே ஆளுநர் செய்வது என்பது வேறு.
இவ்வாறு பல்வேறு தரப்புகள் அரசு அலுவலகங்களை நோக்கிக் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் போக்கு என்பது வடக்குக்கு வெளியே பெருமளவுக்கு இல்லை என்று ஒரு மூத்த உயர் நிர்வாக அதிகாரி கவலைப்பட்டார். வடக்குக்குள் மட்டும் இந்த குற்றச்சாட்டுகளை முன் வைப்பதற்கு பின்னால் வேறு உள் நோக்கங்கள் உண்டா? என்ற சந்தேகத்தை அது கிளப்புகின்றது.
இக் குற்றச்சாட்டுக்கு இலக்காகும் அநேகமானவர்கள் தமிழ் அரசு அலுவலர்கள்தான். இதன் மூலம் அரசாங்கத்துக்கு எதிராக மேலெழக்கூடிய எதிர்ப்புணர்வை தமிழ் அரசு அலுவலர்கள் மீது திருப்புவதன் மூலம் அரசாங்கம் தப்பிக்கொள்ளப் பார்க்கின்றதா? அல்லது பொறுப்புக்கூற வேண்டிய, நிறைவேற்று அதிகாரமுடைய, தற்துணிவாக முடிவுகளை எடுக்க வேண்டிய தரப்புக்கள் தங்களுடைய பொறுப்புகளைத் துறக்கப் பார்க்கின்றனவா?
இப்படிப் கேட்பதன் மூலம் அரச அலுவலகங்களில் தமது செல்வாக்கைப் பிரயோகிக்க முடியாத சாதாரண மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை இக் கட்டுரை குறைத்து மதிப்பிடுகிறது என்று எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. அரசு அலுவலகங்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் எப்பொழுதும் உண்டு. அது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசு நிர்வாகம்தான். ஏனென்றால் அரச திணைக்களங்கள் யாவும் மத்திய அரசாங்கத்தின் உபகரணங்களே.
அதனால்தான் தமிழ் பகுதிகளில் நில ஆக்கிரமிப்பு சிங்கள பௌத்த மயமாக்கல் போன்றவற்றை மத்திய அரசாங்கத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சில திணைக்களங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் முன்னெடுத்து வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இக் குற்றச்சாட்டுகளின் பின்னணியில், வடக்கில் உள்ள அரச அலுவலகங்கள் வினைத்திறனோடு செயல்படவில்லை என்று கூறி அதே அரசுக் கட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் அதன் மீது குற்றச்சாட்டை முன்வைக்கின்றார்கள். இதை எப்படிப் பார்ப்பது ?
மத்திய அரசாங்கத்தின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் வரும் திணைக்களங்கள் சில சிங்கள பௌத்த மயமாக்கலைத் தீவிரமாக முன்னெடுத்துக் கொண்டிருக்க, மாகாண நிர்வாகத்தின் கீழ் வரும் அரச அலுவலகங்கள் மீது அதே மத்திய அரசாங்கம் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றது. இந்த இரண்டு நடவடிக்கைகளும் ஒரே அரசுக் கட்டமைப்பின் இரு வேறு செயல்பாடுகள்தான். இவை இரண்டுமே ஒரே நோக்கத்தை கொண்டவை. ஒன்று சிங்கள பௌத்த மயமாக்கலை நேரடியாகச் செய்கின்றது. இன்னொன்று தமிழ் நிர்வாகிகளுக்கு எதிராக தமிழர்களையே திருப்பி விடுவது. இதன்மூலம் தமிழ் மக்கள் தங்களுக்குள் தாங்களே மோதி தங்கள் சக்தியை வீணாக்குவது. இந்த உள்நோக்கத்தோடுதான் வடக்கில் அதிகாரிகளை நோக்கி ஒரு குற்றச்சாட்டு அலை எழுப்பப்படுகிறதா?