அரசு ஒப்பந்தத்தில் முஸ்லிம்களுக்கு 4 சதவீதம் ஒதுக்கீடு வழங்கும் வகையில் கர்நாடகா அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது. அதேவேளையில் டில்லி நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் சர்மா வீட்டில் கோடிக்கணக்கில் பணம் சிக்கியது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற மாநிலங்களவை கூடியதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள், நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் பணம் சிக்கியது தொடர்பாக கேள்வி எழுப்பியது. அதேவேளையில் கர்நாடகா மாநில அரசும், துணை முதல்வர் டி.கே. சிவக்குமாரும் அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்துள்ளது தொடர்பாக கேள்வி எழுப்பினர். இதனைத்தொடர்ந்து அவையை நடத்த முடியாத அளவிற்கு கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
இதனால் அவை ஒத்திவைக்கப்பட்டது. அதேபோன்று மக்களவையும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் பாஜக பொய்யான பிரச்சினையால் நாடாளுமன்றத்தை முடக்க வந்துள்ளது என காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில் ” நாடாளுமன்றத்தை ஒத்திவைக்க பாஜக முற்றிலும் போலியான பிரச்சனையுடன் வந்தது. இதனால் மிகவும் முக்கியமான பிரச்சினையான நீதிபதி யஷ்வந்த் வர்மா பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக விவாதம் நடைபெற முடியாமல் போனது” எனத் தெரிவித்துள்ளார். பிரியங்கா காந்தி “பாஜக அவையை நடத்த விடக்கூடாது என்ற மனநிலையில் இருந்ததாக தெரிகிறது. அவர்கள் அவையை நடத்த விரும்பவில்லை. இன்றோடு பல நாட்கள் இதுபோன்று அமளியால் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்த சாக்குபோக்கு அல்லது வேறு ஏதாவது காரணத்தை கண்டுபிடிக்கிறார்கள்” என்றார்.