அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று டில்லி சென்றார். டில்லி செல்லும் எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், டில்லியில் உள்ள அதிமுக அலுவலகத்தை பார்வையிடுவதற்காகத்தான் வந்துள்ளேன். யாரையும் சந்திக்கவில்லை என டில்லி இருந்தபோது தெரிவித்தார். ஆனால் நேற்று மாலை அமித் ஷாவை சந்தித்தார். சந்திப்பின்போது கூட்டணி குறித்து பேசவில்லை என எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார். இந்த நிலையில் அமித் ஷா- எடப்பாடி பழனிசாமி சந்திப்பு குறித்து இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியதாவது: எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக நிர்வாகிகள் அதிமுக கட்டிடத்தை பார்வையிட செல்வதாக கூறினார்கள். ஆனால் அமித் ஷாவை சந்தித்தார்கள். ஏன் இவ்வளவு ஒளிவு மறைவாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க வேண்டிய அவசியம் என்ன?. பகிரங்கமாக சந்திக்கலாமே… ஒளிந்து மறைந்து சந்திக்க வேண்டிய அவசியம் இல்லையே… நேற்று கட்டிடத்தை திறந்து வைக்க வந்துள்ளேன் என்றார்.
இன்று தேர்தலை பற்றி பேசவில்லை. தமிழ்நாடு பிரச்சினை பற்றி பேசினோம் எனச் சொல்கிறார். நிச்சயதார்த்தம் நடைபெற்றிருக்கிறது. கல்யாண தேதி எந்ததேதி என்று தீர்மானித்து இருக்கிறார்கள் என்று தெரியவில்லை… அவ்வளவுதான்… பாஜக உடன் கூட்டணி கிடையாது, ஒட்டும் கிடையாது, உறவும் கிடையாது எனக் கூறியவர்கள் மணிக்கணக்கில் பேசியுள்ளனர். என்ன பேசியிருப்பார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். தமிழ்நாடு பிரச்சினை என்றால் சந்திக்க அனுமதி வழங்கியிருக்கமாட்டார்கள். அப்படி வழங்கினாலும் கோரிக்கை மனுவை பெற்று 3 நிமிடத்தில் அனுப்பியிருப்பார்கள். அரசியல் உறவே கிடையாது என சத்தியம் பேசிய எடப்பாடி பழனிசாமி, எந்த நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் சந்தித்து பேசினார் எனத் தெரியவில்லை. என்ன நெருக்கடி என்று தெரியவில்லை. ஏதோ ஒரு நெருக்கடிக்கு உள்ளாகி அமித் ஷாவை சந்தித்து பேசியிருக்கிறார். மெல்ல மெல்ல மற்ற செய்திகள் வெளிவரும்.
இவ்வாறு முத்தரசன் தெரிவித்தார்.