பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானின் எல்லையில் அமைந்துள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் கிளர்ச்சி குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த கிளர்ச்சி குழுக்களை சேர்ந்தவர்கள் பலுசிஸ்தானை தனிநாடாக அறிவிக்கக்கோரி அரசுக்கு எதிராக தொடர் வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக பாகிஸ்தான் அரசால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (பி.எல்.ஏ.) சமீபகாலமாக பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகிறது. கடந்த 11-ந்தேதி பாகிஸ்தானின் போலன் மாவட்டத்தில் குடாலார் மற்றும் பிறுகோனேரி நகரங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்த ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயிலை பயங்கரவாதிகள் கடத்தினர். அந்த ரெயிலில் இருந்த 440 பயணிகளை பயங்கரவாதிகள் பணயக் கைதிகளாக பிடித்து வைத்தனர். அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட பாகிஸ்தான் பாதுகாப்பு படை வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் 26 பணயக் கைதிகள் உயிரிழந்தனர். அதே சமயம், 33 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்று, 354 பணயக் கைதிகளை பாதுகாப்பு படையினர் பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ரெயில் கடத்தல் சம்பவத்தில் பயங்கரவாதிகளுக்கு உதவியாக செயல்பட்ட 4 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.