புதுச்சேரி, இலாசுபேட்டையில் காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அமைந்துள்ளது. இதில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றும் முனைவர் மு. இளங்கோவனுக்கு, தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் 2024 ஆம் ஆண்டுக்குரிய நற்றமிழ்ப் பாவலர் விருது வழங்கப்பட்டுள்ளது.
25.03.2025 அன்று சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற தமிழ் அகராதியியல் நாள் விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் “நற்றமிழ்ப் பாவலர்” விருதினைப் பேராசிரியர் மு. இளங்கோவனுக்கு வழங்கினார். விருதுத்தொகை ஐம்பதாயிரம் ரூபாவும், தங்கப்பதக்கம், சான்றிதழ் ஆகியனவும் மு.இளங்கோவனுக்கு வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித்துறை செயலாளர் வே. இராசாராமன், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் ஔவை. ந. அருள், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநர் க. பவானி ஆகிய அரசு அதிகாரிகளும் தமிழறிஞர்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
பேராசிரியர் மு. இளங்கோவன் இணைய ஆற்றுப்படை, மாணவராற்றுப்படை, அச்சக ஆற்றுப்படை, அரங்கேறும் சிலம்புகள், மணல்மேட்டு மழலைகள் உள்ளிட்ட மரபுக் கவிதை நூல்களை நல்ல தமிழில் எழுதியுள்ள முயற்சியைப் பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது
எமது பேராசிரியப் பெருமகனுக்கு கனடா உதயன் ஆசிரிய பீடம் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.