தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டில் தே.மு.தி.க. பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் கலந்து கொண்டார்.
எனது தந்தை படப்பிடிப்புக்கு செல்லும் போதும், அரசியல் நிகழ்ச்சி சென்றாலும் என்னை எப்போதும் அழைத்து செல்வார். அன்று முதல் இன்று வரை எனக்கு தொண்டர்கள் தான் பாதுகாப்பு.
இன்று என்னை வாரிசு அரசியல் என கூறுகிறார்கள். ஆனால், ஒருகாலத்தில் விஜயகாந்திற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருந்த நிலையில், தொண்டர்கள் அழைத்ததின் பேரில், எனது கனவுகளை தள்ளிவிட்டு தான் அரசியலுக்கு வந்தேன். கேப்டனின் வாரிசான நான் தைரியமாக, நேர்மையாக மக்களுக்காக உழைக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன். இதை யாராலும் மாற்ற முடியாது. லஞ்சம், ஊழல் இல்லாத தமிழ்நாட்டை கொண்டு வர வேண்டும் என்று கூறிய முதல் தலைவர் நமது கேப்டன் தான். 25 ஆண்டுகளுக்கு முன்பே ரேஷன் பொருள் வீடு தேடி வரும் என்று அறிவித்தவர் கேப்டன் விஜயகாந்த். தனது பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக உறுதியேற்று, தனது சொந்த பணத்தில் பல்வேறு நலத்திட்டங்களை செய்தவர் விஜயகாந்த் தான். அதேபோல் நானும், தொண்டர்களும் ‘இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கு’ என்பதில் உறுதியாக உள்ளோம். 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுகள் உள்ளன. அதற்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அரசியலில் பல்வேறு மாற்றங்கள் வரலாம். தே.மு.தி.க. இன்னும் பலப்படுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.