மா மா விளம்
ஓலைக் குடிசை வாழ்ந்ததும்
ஓயா வறிமை கண்டதும்
சேலைத் தலைப்பில் துவட்டிய
சேராத் தலையைக் கோதியும்
மாலை, விடியல் ஆடியும்
மாயக் கனவில் ஓடியும்
சோலைக் குயிலின் மொழியுமே
சொந்தம் எனவே நம்பினேன்
ஊரை விட்டு விலகியும்
உயரச் செல்ல விரைந்ததும்
தாரைக் கண்ணீர் வடித்ததும்
தாயாம் ஊரைப் பிரிந்ததும்
போரின் கொடிய நிலைமையால்
போதாக் காலம் வந்ததால்
பாரில் இங்கு வந்துமே
பாசம் இன்றிக் கிடக்கிறோம்
என்றும் வாழ்வில் துன்பமே
என்று நினைந்த வேளையில்
இன்பம் ஒன்று உண்டென
இறைவன் வைத்த நியதியும்
அன்பின் வாழ்வு கண்டதும்
அருமை மக்கள் பெற்றதும்
துன்பம் தொடர்ந்த துயரதும்
துடைத்த இன்பம் வந்ததே
கணவர் இழந்த விதவையாய்க்
காதல் இன்றிக் கிடப்பினும்
மனதில் உறுதி கொண்டவள்
மகிழ்ச்சி பொங்க நிற்கிறேன்
குணமாய் மக்கள் நின்றனர்
குடும்பப் பேரன் வந்தனன்
தனமாய் நின்று வாழ்கிறான்
தானே என்னை ஆழ்கிறான்
நினையாக் காலம் வந்தது
நெஞ்சம் மகிழ்ச்சி கண்டது
கனவாய் நினைத்த நாட்களும்
கவிதை சொல்லி நின்றன
மனதின் துயரம் நீங்கிட
மகிழ்ச்சி வந்து துள்ளுதே
நனவாய் மாறி இன்பமும்
நன்மை தந்து நிற்குதே
நன்றாய்க் கூடிக் கேட்டவர்
நல்ல கவிதை தன்னையும்
மன்றில் அமர்ந்த அனைவரும்
மகிழ்வில் நன்றி சொல்கிறேன்
இன்றும் என்னில் காண்பது
இதயம் நிறைந்த மகிழ்ச்சியே
அன்பாய் கனவும் நனவென
அருமை வாழ்வைக் காண்பமே
Dr. புட்பா கிறிட்டி (Canada)