விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறி இருப்பதாவது: ஒரு நாள் கூட எனக்கு ஓய்வு இல்லை. ஒரு மணி நேரம் கூட எனக்கு தனிமை இல்லை என்கிற நிலை தான் நீடிக்கிறது. கட்சிப் பணியில் கவனம் செலுத்த இயலாத நிலையிலும் கூட காதணி விழாவுக்கும், மஞ்சள் நீராட்டு விழாவுக்கும், இல்லத் திறப்பு, திருமண நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்ச்சிகளுக்கும் பிடிவாதமாக வந்து மணிக்கணக்கிலோ அல்லது நாள் கணக்கிலோ கிடையாய் கிடந்து அழுத்தம் கொடுத்து இழுத்து செல்வதிலேயே தோழர்கள் குறியாக இருக்கிறார்கள். 24 மணி நேரமும் உங்களோடு இருக்க வேண்டும் என்பதிலே எனக்கு எந்த சங்கடமும் இல்லை. ஆனால் எந்த பணிகளுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்பது முக்கியமானது.
அலுவலகத்திலே போய் தலைமையகத்தில் காத்திருந்தால் 1 மணி நேரத்தில் பார்வையாளர்களை முடித்துவிடலாம் என்றால் ஒருநாளும் என்னால் முடியவில்லை. அதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. காதணி விழா, மஞ்சள் நீராட்டு விழா, திருமண விழா போன்றவற்றுக்கு அழைப்பதை நிறுத்துங்கள். கட்சியில் உள்ள அடுத்த நிலையில் இருக்கிற முன்னணி தோழர்களையும், மூத்த பொறுப்பாளர்களையும் அழைத்து செல்லுங்கள் என்று பல முறை வேண்டுகோள் விடுத்தும் அதனை பின்பற்ற தவறும் நிலை எனக்கு கடும் அழுத்தத்தை உருவாக்குகிறது. தமிழ்நாட்டு அரசியலில் தேவையற்ற உரையாடல்களை திட்டமிட்டு உருவாக்குகிறார்கள். சாதிய, மதவாத சக்திகளை ஊக்கப்படுத்துகிறார்கள். தி.மு.க. தலைமையிலான கூட்டணி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்கிற அடிப்படையில் நாம் கருத்துக்களை தொடர்ந்து முன்வைப்பதால் விடுதலை சிறுத்தைகளுக்கு எதிரான அவதூறுகளை பரப்புகிறார்கள். ஏதோ நாம் தி.மு.க.வை மட்டுமே நம்பி கிடக்கிறோம் என்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார்கள். இந்த அற்பர்களின் அவதூறுகளை நாம் கடந்து செல்கிறோம் என்றாலும் கூட இயக்க தோழர்கள் அதில் ஒரு தெளிவை பெற வேண்டும். தேர்தல் அரசி யலில் எந்த முடிவையும் நம்மால் எடுக்க முடியும். அது ஒன்றும் பெரிய கம்பசூத்திரம் இல்லை. எல்லா கதவுகளையும் திறந்து வைத்திருப்பது, ஒரே நேரத்தில் பலரோடு பேரம் பேசுவது, கூடுதலான பேரம் பலிக்கிற இடத்திலே உறவை வைத்துக் கொள்வது, கூட்டணியை தீர்மானிப்பது என்பதெல்லாம் பெரிய ராஜதந்திரம் இல்லை. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு கூட்டணியில் தொடர்கின்றோம் என்றால் அதற்கு துணிவு, தெளிவு, தொலை நோக்கு பார்வை வேண்டும். தி.மு.க. கூட்டணியை பலவீனப்படுத்த அவர்களுக்கு இருக்கும் ஒரே துருப்பு சீட்டு விடுதலை சிறுத்தைகள் தான். இவ்வாறு அவர் கூறினார்.