இஸ்ரேல்-காசா இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் காலாவதியான நிலையில் காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. பணய கைதிகளை மீட்கவும், ஹமாஸ் ஆயுதக்குழுவினரை முழுமையாக ஒழிக்கும் நோக்கிலும் காசா முனையில் இஸ்ரேல் தொடர்ந்து தரைவழி, வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த போாில் பாலஸ்தீனத்தை சேர்ந்த அப்பாவி பொதுமக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர். 2 ஆண்டுகளுக்குமேல் நடைபெற்று வரும் போரில், காசாவில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 51 ஆயிரமாக அதிகரித்துள்ளது. காசா மீதான இஸ்ரேல் தாக்குதல்களில் கடந்த 2 நாட்களில் 90க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்தநிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கூறியதாவது:- காசாவில் போரிடுவதைத்தவிர வேறு வழியில்லை. ஹமாஸ் அழிக்கப்பட்டு, பணயக் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படும் வரை போரை முடிவுக்குக் கொண்டுவர இயலாது. அவ்வாறு போரிட்டால்தான், இஸ்ரேலுக்கு ஹமாஸ் படையினரால் அச்சுறுத்தல் இருக்காது. போரைத்தவிர இஸ்ரேலுக்கு வேறு வழியில்லை என்று தெரிவித்தார்.
