துணைவேந்தர்கள் மாநாட்டில், துணை அதிபர் ஜெகதீப் தன்கர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமன விவகாரத்தில் தமிழ்நாடு அரசுக்கும், ஆளுனர் ஆர்.என்.ரவிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வந்தது. இந்த சூழலில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுனருக்கு பதிலாக மாநில அரசுக்கு வழங்குவது உட்பட 10 சட்ட மசோதாக்களை சட்டசபையில் இருமுறை நிறைவேற்றி ஆளுனரின் ஒப்புதலுக்காக அனுப்பியநிலையில், அவர் ஒப்புதல் அளிக்கவில்லை. இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் தொடரப்பட்ட வழக்கில் நிலுவையில் உள்ள 10 மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றமே தனக்குரிய சிறப்பு அதிகாரத்தின் மூலம் ஒப்புதல் அளித்து உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் 10 சட்டங்களும் அரசிதழில் வெளியிடப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களின் ஆலோசனைக் கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஏப்.16-ம் தேதி தலைமைச் செயலகத்தில் நடந்தது. வழக்கமாக, பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுனர் ஆர்.என்.ரவி ஆண்டுதோறும் துணைவேந்தர்களின் ஆலோசனை கூட்டத்தை நடத்துவார். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் எதிரொலியாக முதல்முறையாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களுடன் ஆலோசனை நடத்தியது உயர்கல்வி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில், ஊட்டியில் 4-வது ஆண்டாக வரும் 25 மற்றும் 26-ம் தேதி துணைவேந்தர்களின் ஆலோசனைக் கூட்டத்தை ஆளுனர் ஆர்.என். ரவி கூட்ட இருப்பதாகவும், அதில் துணை அதிபர் ஜெகதீப் தன்கர் பங்கேற்க உள்ளதாகவும் ஆளுனர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் உள்ள 48 மத்திய, மாநில அரசுப் பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பல்வேறு துறைகளின் நிபுணர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.