அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வரிப்போர் உச்சத்தில் உள்ளது. அமெரிக்கா விதித்த பரஸ்பர வரிக்கு சீனா பதிலடி கொடுத்தது. இதனால் கோபம் அடைந்த அமெரிக்கா, சீனா மீது தொடர்ச்சியாக வரியை விதித்து வருகிறது. தற்போது சீன பொருட்களுக்கு 245 சதவீதம் வரியை அமெரிக்கா விதித்துள்ளது.இதனால் சீனா – அமெரிக்கா இடையேயான வரி யுத்தம் உச்சத்தில் உள்ளது. இந்த நிலையில் சீனாவுக்கு பாதகம் ஏற்படும் வகையில் அமெரிக்காவுடன் பிற நாடுகள் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளக் கூடாது என்று எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சீனா வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: – சமரசங்கள் அமைதியை கொண்டு வராது. எங்களுடைய இழப்பில் உலக நாடுகள் ஆதாயம் தேட வேண்டாம்.இத்தகைய சமரச முயற்சி சர்வதேச வர்த்தகத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்கான தீர்வாகாது” என்று தெரிவித்துள்ளது. உலக நாடுகள் சீனாவுடனான வர்த்தகத்தை குறைத்துக் கொள்ளும்படி அமெரிக்க நிர்பந்தித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் சூழலில் சீனா இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. மேலும் அமெரிக்காவுடன் இத்தகைய ஒப்பந்தங்களில் ஈடுபடும் நாடுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சீனா தெரிவித்துள்ளது.
