யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்
பிரதமர் ஹரிணி தேர்தல் பிரச்சாரத்துக்காக நெடுங்கனிக்கு வர இருந்த பின்னணியில் அங்கே ஊரில் அவரை வரவேற்கும் பதாகைகள் கட்டப்பட்டன. இந்தப் பதாதைகளைக் கட்டியவர்களில் ஒருவர் புனர்வாழ்வு பெற்ற முன்னால் இயக்கத்தவர் என்றும் மற்றவர் ஒதிய மலை இன அழிப்புச் சம்பவத்தில் கொல்லப்பட்டவரின் பிள்ளை என்றும் ஒரு குறிப்பை அப்பகுதிக்கான தமிழ்த் தேசியக் கட்சி ஒன்றின் முக்கியஸ்தர் முகநூலில் பதிவிட்டிருந்தார்.
இத் தகவல் உண்மையா பொய்யா என்று தெரியவில்லை. ஆனால் அந்த இரண்டு பேர்கள் மட்டுமல்ல அவர்களைப் போல பல முன்னாள் இயக்கத்தவர்கள், முன்பு தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு ஆதரவாக இருந்தவர்கள், குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளிடம் நிதி உதவி பெற்று படித்தவர்கள், இப்படிப்பட்ட பலரும் இப்பொழுது தேசிய மக்கள் கட்சியின் ஆதரவாளர்களாக மாறியிருக்கிறார்கள்.
யாழ்.பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்களில் கிட்டத்தட்ட 15க்கும் குறையாதவர்கள் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு தேசிய மக்கள் கட்சியை ஆதரித்து ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தார்கள். ஆனால் அந்த அறிக்கையில் அவர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதனை மறைமுகமாகத்தான் சுட்டியிருந்தார்கள். வெளிப்படையாக தேசிய மக்கள் சக்திக்கு வாக்களியுங்கள் என்று கூற அவர்கள் தயங்கினார்கள். ஆனால் ஜனாதிபதித் தேர்தலில் கிடைத்த வெற்றி நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்த வெற்றி என்பவற்றின் பின்னணியில் அவர்கள் இப்பொழுது பகிரங்கமாக தேசிய மக்கள் கட்சியை ஆதரிப்பது மட்டுமல்ல, அவர்களில் சிலர் பிரச்சார மேடைகளிலும் தோன்றுகிறார்கள்.
அவர்களில் ஒருவர் யாழ்.மாநகர சபையின் முதன்மை வேட்பாளர். மற்றொருவர் மொழிபெயர்ப்பாளராக ஏற்கனவே சமூகத்தில் நன்கு அறிமுகமானவர். குறிப்பாக விடுதலைப் புலிகள் இயக்கத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட மானுடத்தின் ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் யாழ்ப்பாணம் வீரசிங்க மண்டபத்தில் அவர் தமிழ்–சிங்கள; சிங்கள– தமிழ் மொழிபெயர்ப்பாளராக செயற்பட்டவர். தமிழ்த் தேசிய அரசியல் சமூகத்துக்குள்ளும் இலக்கிய வட்டாரத்துக்குள்ளும் நன்கு தெரியவந்த ஒருவர். அவர் அனுர குமாரவின் இளமைக்கால நண்பர்களில் ஒருவர். இப்பொழுது பகிரங்கமாக என்பிபிக்கு ஆதரவாக வேலை செய்கிறார். அண்மையில் கடந்த வாரம் கிட்டு பூங்காவில் நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் அனுரவின் மொழிபெயர்ப்பாளராக வந்திருந்தார்.
இத்தனைக்கும் யாழ். பல்கலைக்கழகத்தில் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை கொண்டவர்களும் தமிழ் தேசிய நிலைப்பாட்டுக்கு ஆதரவானவர்களும்தான் அதிகமாக உள்ளார்கள். பல்கலைக்கழகத்தின் சில பீடங்கள், சில துறைகள் ஏற்கனவே சிங்களமயப்பட்டு விட்டன. அங்கெல்லாம் மாணவத் தலைவர்களைத் தேர்வு செய்யும் பொழுது சில சமயம் சிங்கள மாணவர்களும் தெரிவு செய்யப்படக்கூடிய ஆபத்து அதிகரித்து வருகிறது. அதுமட்டுல்ல தமிழ் மாணவர்கள் மத்தியில் தெரிவு செய்யப்படுகிறவர்களுக்கும் சில சமயம் சிங்களக் காதலிகள் உண்டு என்று ஒரு செயற்பாட்டாளர் சுட்டிக்காட்டினார். பல்கலைக்கழகத்தின் சில துறைகள் பெருமளவுக்கு சிங்கள மயப்பட்டுவிட்டன.
ஆனாலும் யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் தேசியவாதத்தின் பக்கம் நிற்கும் விரிவுரையாளர்களே அதிகம். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மக்கள் பேரவை இயங்கிய பொழுது சில விரிவுரையாளர்கள் அதில் அங்கம் வகித்தார்கள். ஆனால் கடந்த ஆண்டு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான மக்கள் கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட்ட பொழுது, அதில் பல்கலைக் கழகத்தின் அரசியல்துறை தலைவரைத்தவிர ஏனைய விரிவுரையாளர்கள் அங்கம் வகிக்கத் தயாராக இருக்கவில்லை. மட்டுமல்ல,அதுதொடர்பான உரையாடல்களிலும் அவர்கள் கலந்து கொள்ளவில்லை.
பொது வேட்பாளரை ஆதரித்து மேடைகளில் பேசத் தயாராக இருந்த சில விரிவுரையாளர்களும் அதற்கான செயற்பாட்டில் இறங்கத் தயாராக இருக்கவில்லை. பொது வேட்பாளர் என்ற கருத்துருவம் கொழும்பு மைய அரசியலுக்கு எதிரானது. எனவே அரசாங்கத்தைப் பகைக்க வேண்டியிருக்கும். அதனால் வரக்கூடிய இழப்புகளையும் ஆபத்துக்களையும் தாங்க வேண்டியிருக்கும். இது ஒரு காரணமாக இருக்கலாம். அதே சமயம் தேசிய மக்கள் சக்திக்காக வேலை செய்யும் பொழுது அதில் ஒரு பாதுகாப்பு உண்டு. ஏனென்றால் அதுதான் அரசாங்கம். அங்கே இழப்புகளுக்கும் பயங்களுக்கும் இடம் குறைவு. இதுகாரணமாகத்தான் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவான விரிவுரையாளர்கள் புத்திஜீவிகள் பகிரங்கமாக மேடைகளில் தோன்றத் தொடங்கி விட்டார்கள்.
ஆனால் யாழ். பல்கலைக்கழகம் ஒரு காலம் தமிழ்த்தேசிய வாதத்தின் அடைகாப்பு மையங்களில் ஒன்றாக இருந்தது. ஆயுதப் போராட்டத்தை ஆதரித்ததற்காக விரிவுரையாளர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அரசியல் கைதிகளாக இருந்திருக்கிறார்கள். சிலர் தலைமறைவாக இருந்தார்கள். அது மிக ஆபத்தான காலம். ஆனால் அக்காலகட்டத்திலும் விடுதலைப் போராட்டத்தோடு உறுதியாக நின்ற ஒரு கல்விச் சமூகம், அறிவுஜீவிகளின் சமூகம் இப்பொழுது அவ்வாறு இல்லை.
பல்கலைக் கழகம் இதில் ஒரு குறியீடு. ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய அரசியலின் குறியீடு.தமிழ்த் தேசிய அரசியல் இப்பொழுது வந்து நிற்கும் இடம் அதுதான். கடந்த 15 ஆண்டுகளாக தமிழ்த் தேசிய கட்சிகள் கட்சிகளாகவும் தங்களையும் வளர்த்துக் கொள்ளவில்லை. தமிழ் மக்களையும் ஒரு தேசமாகத் திரட்டவில்லை. அதன் விளைவாகத்தான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அப்படி ஒரு தோல்வி ஏற்பட்டது. அந்த தோல்வியிலிருந்து கற்றுக்கொண்டு, வர இருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலையாவது அவர்கள் பொருத்தமான உபாயங்களோடு அணுகுவார்களா?
தமிழ்த் தேசியப் பரப்பில் இப்பொழுது மொத்தம் நான்கு தரப்புகள் உண்டு. தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கூட்டு, சங்குக் கூட்டு, விக்னேஸ்வரனின் கட்சி ஆகிய நான்கு தரப்புகள் அரங்கில் உண்டு. ஆனால் இந்த நான்கு தரப்புகளுக்கும் அச்சுறுத்தலாக இருப்பது ஒரே ஒரு தரப்பு.அதுதான் தேசிய மக்கள் சக்தி. அதாவது ஆளுங்கட்சி.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது அந்தக் கட்சி எந்த ஒரு சிங்களக் கட்சியோடும் கூட்டுச்சேர மறுத்துவிட்டது. வேண்டுமானால் எங்களோடு வந்து இணையுங்கள் என்று தான் அவர்கள் கேட்டார்கள். தமிழ்த் தரப்பிலும் அவர்களை நோக்கிச் சென்ற கட்சிகளை அவர்கள் கட்சிகளாக இணைத்துக் கொள்ளவில்லை. எங்களுக்குள் கரைந்து விடுங்கள் என்றுதான் கேட்டார்கள். அதன் மூலம் அவர்கள் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். இப்பொழுது உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் அவர்கள் அதே கொள்கையைத்தான் பின்பற்றுகிறார்கள். தங்களோடு இணைய விரும்புகிற யாரும் தங்களுக்குள் கரைந்து விட வேண்டும் என்பதே அவர்களுடைய நிபந்தனை.
இது கட்சிகளுக்கு மட்டுமல்ல தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் பொருந்தும்.
‘இலங்கையர்களாகச் சிந்திப்போம்‘ என்று அவர்கள் கூற வருவது அதைத்தான்.உங்கள் தேசிய அடையாளங்களை கைவிட்டு, உங்கள் தேசிய இருப்பைக் கைவிட்டு கொண்டு, இலங்கையர்களாக எங்களோடு கரையுங்கள் என்று அவர்கள் கேட்கிறார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் அவர்களுக்கு எதிர்பாராத வெற்றியைக் கொடுத்திருக்கிறார்கள். அந்த வெற்றியை மேலும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் உறுதிப்படுத்திக் கொண்டால் நாங்கள் இலங்கையர்களாக ஒன்றாகி விட்டோம் என்று அவர்கள் கூறப் போகிறார்கள்.
இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கட்சிகளிடம் பொருத்தமான விழிப்பும் பொருத்தமான வியூகங்களும் உண்டா?
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஓரளவுக்கு பொருத்தமான வியூகங்களை வகுத்து, பொருத்தமான ஒரு கூட்டை உருவாக்கியிருக்கின்றது. ஆனால் அது தமிழ் மக்கள் முன் ஒரு பிரம்மாண்டமான கூட்டாக இன்னமும் எழுச்சி பெறவில்லை.
தமிழரசுக் கட்சி தொடர்ந்தும் இரண்டு பட்டிருக்கின்றது. சுமந்திரன் கட்சிக்குள் தன் பிடியை படிப்படியாக பலப்படுத்தி வருகின்றார். கட்சித் தலைவருக்கான தேர்தல் இனி நடக்குமாக இருந்தால் பெரும்பாலும் அவர்தான் வெல்வார். கட்சியின் செயலாளராக வந்ததன்மூலம் அவர் கட்சியின் அடிபட்ட உறுப்பினர்கள் மத்தியில் தனக்கு விசுவாசமானவர்களின் தொகையை பெருக்கி வருகிறார். உள்ளூராட்சி சபைத் தேர்தலை நோக்கிக் கட்சியை வழிநடத்துவது என்ற அவருடைய செயற்பாட்டுக்குள் இரண்டு பிரதான உள் நோக்கங்கள் உண்டு. முதலாவது உள்நோக்கம், கட்சிக்குள் தலைமைப் பொறுப்புக்காக இனி நடக்கக்கூடிய தேர்தலில் கட்சியின் தலைவராகத் தானே தெரிவு செய்யப்படக்கூடிய நிலைமைகளை உறுதிப்படுத்துவது. இரண்டாவது,சிறீதரனை கிளிநொச்சிக்குள் முடக்குவது. பின்னர் படிப்படியாக கட்சியை விட்டு அகற்றி விடுவது. அவரைப் பொறுத்தவரை கட்சியை பலப்படுத்துவது என்பது தன்னுடைய விசுவாசிகளின் தொகையை அதிகப்படுத்துவது. சிறீதரனை ஓரங்கட்டுவது.
இந்த இரண்டு உள்நோக்கங்களையும் முன்வைத்து அவர் படிப்படியாக கட்சிக்குள் தன் பிடியை பலப்படுத்தி வருகிறார்.அவர் தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டும் அரசியலுக்கு உரியவரல்ல..தன் கட்சியை இரண்டாக உடைத்து வைத்திருக்கும் ஒருவர் எப்படித் தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவார்?
இப்படித்தான் இருக்கிறது தமிழ்த் தேசியக் கட்சிகளின் நிலைமை. இந்நிலையில் நான்கு தரப்புகளாக தமிழ்த் தேசியக் கட்சிகள் தேசிய மக்கள் சக்தியை எதிர்கொள்ளப் போகின்றன. அனுர அலை தெற்கில் வடியத் தொடங்கி விட்டது என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள். அதுபோல தமிழ் பகுதிகளிலும் அந்த அலை தொடர்ந்தும் வீசுகின்றதா அல்லது வடிகிறதா ?
கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் வடக்கு கிழக்கில் அது ஒரு பேரலையாக இருக்கவில்லை. தமிழ் கட்சிகள் மீதான வெறுப்பில் தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தார்கள். கடந்த நாடாளுமன்றத்தில் தமிழ் பகுதிகளில் வாக்களிப்பு கோலத்தை கூட்டிக்கழித்துப் பார்த்தால் ஒரு விடயம் தெளிவாக தெரியும். தமிழ் தேசிய கட்சிகள் ஒரு குடையின் கீழ் நின்று இருந்திருந்தால் அதிக ஆசனங்கள் அவர்களுக்குத்தான்.தேசிய மக்கள்சக்தி பின் தள்ளப்பட்டிருக்கும்.
இது விடயத்தில் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் தமிழ்த்தேசிய கட்சிகளுக்கு இடையே போட்டித் தவிர்ப்பு உடன்பாடு தேவை என்று பல தரப்புகளும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்த போதிலும் அது தொடர்பான உரையாடல் எவையும் இன்றுவரை தொடங்கவில்லை. கடந்த மாதம் ஐநா இலங்கையில் அதன் 70ஆவது ஆண்டு பிரசன்னத்தைக் கொண்டாடிய பொழுது அந்த நிகழ்வு யாழ் திண்ணை ஹோட்டலில் இடம்பெற்றது. அங்கு சுமந்திரனைக் கண்டபோது போட்டித் தவிர்ப்பு தொடர்பாக அவரிடம் கதைத்தேன்.அவர் பதில் சொல்லவில்லை. மணிவண்ணனிடமும் சொன்னேன். இது நடந்து பல வாரங்களாகி விட்டன. கட்சிகள் தங்களுக்கு இடையே போட்டித் தவிர்ப்புக்கு போகக்கூடிய நிலைமைகள் இருப்பதாகத் தெரியவில்லை. ‘நான் நான்‘ என்றுதான் ஒவ்வொரு கட்சியும் சிந்திக்கின்றது. ‘நாங்கள்‘ என்று அதாவது ‘நாடு தேசம்‘ என்று சிந்திப்பதாகத் தெரியவில்லை. நான் நான் என்று சிந்தித்தால் போட்டி தவிர்ப்பிற்குப் போகமுடியாது. நாங்கள் என்று சிந்தித்தால்தான் போட்டித் தவிர்ப்புக்குப் போகலாம். ஆனால் தேசிய மக்கள் சக்தியோ ‘நாங்கள் இலங்கையர்கள்‘ என்று சொல்லிக் கொண்டு தமிழ்க் கிராமங்களைக் கவ்விப் பிடிக்க முயற்சிக்கின்றது.