தற்போது கொழும்பில் உள்ள சிறைச்சாலைகளில் கொரோனா தொற்று மிக மோசமாகப் பரவ ஆரம்பித்துள்ளது குறிப்பாக வெலிக்கடை போகம்பரை கொழும்பு விளக்கமறியல் சிறை பூசா மகசின் குருவிட்ட போன்ற சிறைச்சாலைகளில் பரவ ஆரம்பித்துள்ளது.
எனினும் இந்த சிறைக்கைதிகளின் விடயத்தில் அரசாங்கமும் அதிகாரிகளும் உரிய கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை. இன்றுவரை சிறைச்சாலைகளில் 500 க்கும் மேற்பட்ட கைதிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தொகை இன்னும் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையே காணப்படுகிறது. ஆரம்பத்தில் கொரோனா தாக்கம் ஏற்பட்ட போது சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளில் அரைவாசியைக் கூட அங்கு நடைமுறைப்படுத்துவதாகத் தெரியவில்லை என அரசியல் கைதிகளின் உறவுகள் இணைந்த குரலற்றவர்களின் குரல் அமைப்பின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் மு.கோமகன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
கைதிகளைப் பார்வையிடுதல் நீதிமன்ற நடவடிக்கைகள் என்பன இடைநிறுத்தப்பட்ட பின்பும் இந்த வைரஸ் தொற்று சிறைக்குள் நுழைந்தது என்றால் இதற்கு யார் பொறுப்பாளி என்பதை எவராலும் தேடிப் பார்க்க முடியவில்லை. மாறாக தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுபவர்கள் ஏனைய குற்றச் செயல்களுடன் தொடர்புபட்ட வர் என தினமும் கைது செய்யப்படுவோர் சிறைத் துறையின் கீழ் தடுத்து வைக்கப்படுகின்றனர். இலங்கையில் 12000 கைதிகளை மட்டுமே தடுத்து வைக்கக் கூடிய சிறைச்சாலைகளில் 37000 த்துக்கும் மேற்பட்ட கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இங்கு எப்படி; சமூக இடைவெளி இருக்கப்போகின்றது. இவர்களை பாதுகாப்புடன் எப்படி பராமரிக்க முடியும்?
தற்போது முக்கியமாக நோக்கப்பட வேண்டிய விடயம் யாதெனில் சுமார் 15-25 வருடங்களுக்கு மேலாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல்கைதிகளுக்கு நீரிழிவு மன உளைச்சல் சுவாசக்கோளாறு போன்ற பல தீராத வியாதிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தமிழ் அரசியல்கைதிகள் இன்னொருபுறம் மிக மோசமான உடல் உளப் பாதிப்புக்கும் உள்ளாகியிருப்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இவர்களுக்கு போதிய மருத்துவமோ போசாக்கான உணவோ கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் குறைவாகவுள்ளது.
இவர்களுக்கான நீதிமன்ற நடவடிக்கைகளும் தொடர்ந்து காலதாமதப்பட்டு வருகின்றது.
இதனாலும் இவர்கள் உடல் உள ரீதியில் இன்னும் மோசமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழ் அரசியல் கைதிகளில் 10 க்கும் மேற்பட்டோர் சிறைச்சாலைக்குள்ளேயே உயிரிழந்துள்ளனர். சம காலத்தில் தமிழ் அரசியல்கைதிகளை பழிவாங்குவதற்கான அனைத்து சாதகமான சூழ்நிலைகள் கொரோனா மூலமும் ஏற்பட்டு வருவதையும் சுட்டிக் காட்டத்தான் வேண்டும்.
தற்போது கொழும்பு மாநகர எல்லைக்குள் கொரோனா தாக்கமும் மரணமும் அதிகரித்து வருகின்றது. தமிழ் அரசியல் கைதிகளை தடுத்து வைக்கப்பட்டுள்ள புதிய மகசின் சிறைச்சாலையின் அமைவிடமான பொரளை பிரதேசம் தொற்று அபாய வலயமாக மாறியுள்ளது. இதனால் சிறைச்சாலை மீது சிறப்பு அவதானம் வேண்டும். சிறைச்சாலையில் நோய் கொத்தணி தோற்றம் பெற்று தொற்று நோய் இன்னும் அதிகரித்து வருவதும் தவிர்க்க முடியாது என சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர்.
இதுவரை நோய்த்தொற்று பற்றிப் பேசிக் கொண்டிருந்த நாம் தற்போது மரணம் பற்றி பேசும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். இந்தநிலையினைத் தொடர்ந்து நாம் நான்காவது அலையினை சந்திக்க நேரிடும் எனவும் சுகாதாரப்பிரிவினர் எச்சரிக்கை செய்கின்றனர். தொடர்ந்து வரும் பேரழிவு இன்னும் பாரதூரமாக இருக்கும் என்றும் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. தற்போது சுகாதார அமைச்சினால் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகள் பற்றிய அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுவாக இது இலங்கை நாட்டு மக்களுக்காக இருப்பினும் சிறைக்கைதிகளுக்கு இந்த வழிமுறைகள் எந்தளவு பொருத்தமாக அமையும் என்பது சந்தேகமே.
குறிப்பாக சிறைச்சாலையைப் பொருத்தமட்டில் எவ்வித சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றக் கூடியதாக இல்லை. சிறைச்சாலைகளில் சமூக இடைவெளி தொற்று நீக்கல் பரிந்துரைக்கப்பட்ட முகக்கவசம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய செயற்றிட்டம் என எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அங்கு மேற்கொள்ளப்படுவதாக இல்லை. இவ்வாறு இருக்கும்போது சிறைக்கொத்தணி ஏற்படுவதைத் தடுத்து சிறைகைதிகளை வைரஸ் தொற்றிலிருந்து எப்படிக் காப்பாற்ற முடியும்.இதற்கான பொருத்தமான நடவடிக்கைகள் பின்பற்றப்படுகின்றனவா இவை எதுவும் இங்கு இல்லவே இல்லை.
பொதுவாக சிறைக்கைதிகளில் இருந்து தமிழ் அரசியல்கைதிகளை வேறுபடுத்தி வித்தியாசப்படுத்தி சிந்திக்க வேண்டிய அவசியப்பாடு உள்ளது. ஏனெனில் தமிழ் கைதிகள் உடல் உள ரீதியாக மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளமை மட்டுமல்ல பல்வேறு நோய்களுடனும் நெருக்கடிகளுடனும் தொடர்ந்து வாழ்ந்து வருபவர்கள். இதனால் தமிழ் கைதிகள் இலகுவில் கொரோனா தாக்கத்திற்கு உட்பட்டு தங்கள் உயிர்களை இழக்க நேரிடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.இதற்கான சாதகமான நிலைமைகளே உள்ளது.
ஆகவே அரசும் அரசாங்கமும் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நெருக்கடி நிலைமைகளை கருத்திற்கொண்டு செயற்பட வேண்டிய அவசர பணி உருவாகியுள்ளது. மிக நீண்ட காலமாக சிறைதடுப்பிலிருக்கும் தமிழ் அரசியல்கைதிகளுக்கு பொது மன்னிப்பு அல்லது நிபந்தனையின் உடனான பிணையினையோ வழங்கி விடுதலை செய்ய முன் வரவேண்டும். தமிழ் கைதிகளின் விடுதலையை சமகாலத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கத்தினையும் கவனத்தில் கொண்டு மனிதாபிமானரீதியில் கைதிகளின் விடுதலையை துரிதப்படுத்தவது மிகப் பொருத்தமான நடைமுறையாகும்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக குரல் கொடுக்கும் அரசியல்வாதிகள் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் சட்டத்தரணிகள் யாவரும் இந்தத் தருணத்தை கைதிகளின் விடுதலைக்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.தற்போது கைதிகளை பார்வையிடுதல் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் கைதிகளுக்கான அத்தியவசியப் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல்கள் நிலவுகின்றன.இதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நீண்ட காலமாக உடல் ரீதியிலும் உள ரீதியிலும் பாதிப்புற்று இருக்கும் கைதிகளை இலகுவில் கொரோனா தாக்கும் அபாயம் சூழ்ந்து வருகிறது. ஆகவே இவற்றிலிருந்து தமிழ் அரசியல் கைதிகளை பாதுகாக்க யாவரும் ஒன்றிணைந்து செயற்படுவது இன்றைய காலத்தின்ம கட்டாயமாகின்றது இந்த மனிதாபிமான செயற்பாட்டிற்காக யாவரும் ஒன்றிணைவோம்.