”ராஜபக்சக்களுடன் நெருங்கிய தொடர்புள்ளவர்களான அருண விதான கமகே அரகலய ஆர்ப்பாட்டத்தில் மூவரை கொலை செய்த குற்றச்சாட்டுக்குள்ளானவர். டேன் பிரியசாத் ராஜபக்சக்களுக்கு எதிரான அரகலய போராட்டம் மீது தாக்குதல் நடத்தியவர்களில் முக்கியமானவர். இவர்கள் இருவரும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு விசாரணைகளுக்கு அழைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்ற நிலையிலேயே சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர்”
கே.பாலா
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே .வி.பி.-தேசியமக்கள் சக்தி ஆட்சியில் இலங்கை மரணங்கள் மலிந்த பூமியாக மாறி வருகின்றது. துப்பாக்கிசூடுகள்,மரணங்கள் என செய்திகள் வராத நாட்களே இல்லை என்னுமளவுக்கு நாட்டின் ஏதோவொரு பகுதியில் தினமும் உயிர்கள் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. கொல்பவர்களும் கொல்லப்படுபவர்களும் பாதாளக் குழுக்களாகவும் அரசியலுடன் ,அரசியல்தலைவர்களுடன் ,கட்சிகளுடன் தொடர்புபட்டவர்களாகவுமே உள்ளனர்.
இலங்கையில் 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இன்று வரையான நான்கு மாத காலப்பகுதியில் 40க்கு மேற்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த துப்பாக்கி சூடுகளில் இதுவரை 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.இதில் 25 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்களால் மேற்கொள்ளப்பட்டவை என்றும் ஏனைய சம்பவங்கள் தனிப்பட்ட விரோதம் காரணமாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் என்றும் கூறப்பட்டாலும் இந்தப் படுகொலைகளில் சிலவற்றின் பின்னணியில் அரசியல் உள்ளமை இரகசியமல்ல.
நாட்டில் அதிகரித்துள்ள துப்பாக்கி சூட்டு சம்பவங்களையும் அதில் கொல்லப்பட்டவர்களையும் வெறுமனே பாதாள உலகக் குழுக்களுடனும் போதைவஸ்து வர்த்தகத்துடனும் மட்டும் தொடர்புபடுத்தி கடந்து போக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான ஜே .வி.பி.தேசிய மக்கள் சக்தி அரசு முயற்சிக்கின்றது. ஆனால் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் படுகொலைகளில் சில பாதாள உலகக் குழுக்கள் போதைவஸ்து வர்த்தகத்திற்கு அப்பால் அரசியல் படுகொலைகளாகவும் சாட்சியங்கள் அழிப்பு கொலைகளாகவுமே உள்ளன.
ஜனவரி மாதம் முதல் இன்று வரையான நான்கு மாத காலப்பகுதியில் 40க்கு மேற்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 25 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில் இவற்றில் கொழும்பு புதுக்கடை நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் ஐந்தாம் இலக்க நீதவான் நீதிமன்ற கூண்டுக்குள் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட கணேமுல்லே சஞ்சீவ என்றழைக்கப்படுகின்ற சஞ்சீவ குமார சமரரத்ன, மித்தெனிய பகுதியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மித்தெனிய கஜ்ஜா என அழைக்கப்படும் அருண விதான கமகே, வெல்லம்பிட்டியில் உள்ள ‘லக்சந்த செவன’ வீட்டுத்திட்ட வளாகத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட டேன் பிரியசாத் ஆகியோரின் படுகொலைகளை அரசியல் படுகொலைகளாகவும் சாட்சியம் அழிப்பு படுகொலைகளாகவுமே உள்ளன.
இதில் முதலாவது நபரான மித்தெனிய கஜ்ஜா என அழைக்கப்படும் அருண விதான கமகே கடந்த பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி மித்தெனிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டார் .அந்த சம்பவத்தில் அருண விதான கமகேயுடன் அவரது 2 குழந்தைகளும் கொல்லப்பட்டனர்.மஹிந்த ராஜபக்சவின் விசுவாசியான இவர் பல் வேறு கொலைகள், குற்றங்களுடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டுகளுக்குள்ளானவர். அருண விதான கமகே அரகலய ஆர்ப்பாட்டத்தில் மூவரை கொலை செய்த குற்றச்சாட்டுக்குமுள்ளானவர். இவ்வாறான சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார் .இவ்வாறான நிலையில் இவர் கொல்லப்படுவதற்கு ஓரிரு சில தினங்களுக்கு முன்னர் சமூக ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியில் ராஜபக்சக்களின் பல இரகசியங்களை அறிந்து வைத்துள்ளதால் தான் எவ்வேளையிலும் கொல்லப்படலாம் எனக் கூறியிருந்தார்.அதேபோன்றே அவர் ஓரிரு தினங்களுக்குள் படுகொலை செய்யப்பட்டார்.
இரண்டாவது நபர் கொழும்பின் பாதாள உலக கோட் பாதராக தன்னை நிலைநாட்டிக்கொள்ள முயற்சித்த கணேமுல்ல சஞ்சீவ.இவர் 39 க்கும் மேற்பட்ட படுகொலைகளுடன் தொடர்புபட்டவர் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல், கப்பம் பெறுதல், கொள்ளை மற்றும் பல குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட இவர் பலமான அரசியல் பின்னணியையும் கொண்டவர் .சில காலம் சிறையில் இருந்த கணேமுல்ல சஞ்சீவ, 2021ஆம் ஆண்டு பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் இரகசியமாக வெளிநாடு சென்ற அவர் அங்கிருந்து 2 ஆண்டுகளில் 17 கொலைகளை வழிநடத்தினார் . இவருக்கு எதிராக நீதிமன்றங்களில் 22 வழக்குகள் இருந்தன. இந்நிலையில் போலி கடவுச்சீட்டில் நேபாளத்தின் காத்மாண்டுவில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் இலங்கைக்கு வந்த கணேமுல்லே சஞ்சீவ கைது செய்யப்பட்டார்
இவர் கைதான நிலையில் எங்கே தமது பெயர்களை வெளியிட்டுவிடுவாரோ பல அரசியல்வாதிகள் கலக்கமடைந்தனர்.இவ்வாறான நிலையிலேயே பெப்ரவரி 19 ஆம் திகதி புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5 ஆம் எண் நீதவான் நீதிமன்ற கூண்டுக்குள்வைத்து நீதிபதி முன்பாகவே சட்டத்த்தரணி வேடமிட்ட கொலையாளியால் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டார்.இதன்பின்னர் ஒப்பந்தக்கொலையாளி கைதான போதும் கொலையாளியை வழிநடத்திய பெண், கொலைக்கு பின்னாலிருந்த எவரும் இதுவரை கைதாகவில்லை. விசாரணைகளும் கைவிடப்பட்டநிலைக்கு வந்துள்ளன. இந்தக்கொலையின் பின்னால் முக்கிய அரசியல் வாதிகள் இருப்பதாக தகவல்கள் உள்ளன.
அடுத்ததவரான டேன் பிரியசாத் படுகொலையும் இதே பின்னணியைக் கொண்டதாகவே இருக்கின்றது. இவரும் ராஜபக்சக்களுடன் நெருங்கிய தொடர்புள்ளவர். ராஜபக்சக்களுக்கு எதிரான அரகலய போராட்டம் மீது தாக்குதல் நடத்தியவர்களில் முக்கியமானவர். 2017 ஆம் ஆண்டு ரோஹிங்கிய முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் முக்கியமானவர்,2018 ஆம் ஆண்டின் திகன இனக்கலவரத்தின் முக்கிய சூத்திரதாரியாக இருந்தவர்,முள்ளிவாய்க்கால் படுகொலைகள்,யுத்தத்தில் உயிர்நீத்தவர்களை நினைவு கூர்ந்து கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் தாக்குதல் மேற்கொண்டவர் .இவர் ஒரு மிக மோசமான இனவாதி.
நவ சிங்கள தேசிய இயக்கத்தின்” ஒருங்கிணைப்பாளரான இவரை மஹிந்த ராஜபக்சவின் மொட்டுக்கட்சியினர் சமூக செயற்பாட்டாளர் என அழைப்பதுடன் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் தமது கட்சி வேட்பாளராகவும் நிறுத்தியுள்ள நிலையிலேயே கடந்த 22ஆம் திகதி மாலை வெல்லம்பிட்டியில் உள்ள ‘லக்சந்த செவன’ வீட்டுத்திட்ட வளாகத்தில் வைத்து இவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரும் சில குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட ஓரிரு தினங்களிலேயே சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குறிப்பாக உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை அரசாங்கம் தீவிரப்படுத்தியிருக்கும் பின்னணியில் சுட்டுக்கொல்லப்பட்ட அருண விதான கமகே , டேன் பிரியசாத்திற்கு இந்தத் தாக்குதல்கள் குறித்த தகவல்கள் தெரிந்திருக்கலாம் என்ற சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. இதனால் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் சூத்திரதாரிகள் யார் என்பது வெளிப்பட்டு விடும் என்பதால் இவர்கள் ”ஒப்பந்த கொலைகாரர்கள்”மூலம் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பல குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ள ,கணேமுல்ல சஞ்சீவ , மித்தெனிய கஜ்ஜா என்றழைக்கப்படும் அருண விதான கமகே, டேன் பிரியசாத் ஆகியோர் ராஜபக்சக்களிற்கு ஆதரவாகவே செயற்பட்டு வந்துள்ளனர். அவர்களுக்காவே பல குற்றங்களிலும் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் அருண விதான கமகே, டேன் பிரியசாத் ஆகியோர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு விசாரணைகளுக்கு அழைக்கப் பட்டு விசாரணைகள் இடம்பெற்ற நிலையில் எவ்வேளையிலும் கைதாகலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்த சூழலிலேயே இருவரும் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரினது படுகொலைகளில் அரசியல் கட்சிகள் மீதே குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன. ராஜபக்சக்களுக்கு நெருக்கமான இவர்கள் பல்வேறு கொலைகள், குற்றங்களில் ஈடுபட்டுள்ள நிலையில் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசு இவர்களிடம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதால் இவர்கள் கைதானால் ராஜபக்சக்கள் தொடர்பான பல்வேறு தகவல்கள், இரகசியங்கள் வெளியாகும் என்ற அச்சத்தால் இவ்விருவரும் ”ஒப்பந்த கொலைகாரர்கள்”மூலம் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் ராஜபக்சக்களின் இரகசியங்கள் தெரிந்த சாட்சியங்கள் அழிக்கப்பட்டுள்ளன என்பது ஒரு குற்றச்சாட்டு.
இவர்கள் இருவரும் ஜே .வி.பி.யின் பின்னணியில் இடம்பெற்ற ”அரகலய” போராட்டத்திற்கு எதிராக செயற்பட்டவர்கள், அருண விதானகமகே அரகலய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் மூவரை சுட்டுக் கொலை செய்த குற்றச்சாட்டுக்குள்ளானவர். டேன் பிரியசாத் கொழும்பு காலிமுகத்திடலில் இடம்பெற்று வந்த அரகலய போராட்டத்தின் மீது கொடூரமான தாக்குதலை நடத்தியவர்களில் மிக முக்கியமானவர். ஆக தற்போது ஜே .வி.பி.யே தேசிய மக்கள் சக்தியாக ஆட்சியில் இருக்கும் நிலையில் போராட்டக்காரர்களை கொன்றவரும் போராட்டத்தின் மீது கொடூரத்தாக்குதலை நடத்தியவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளமை ஒரு அரசியல் பழிவாங்கல் படுகொலை என்பது மற்றைய குற்றச்சாட்டு.
பாதாள உலகக் குழுக்கள் ,போதைப்பொருள் கடத்தல்காரர்கள், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவினர் எனப் பலரும் கடந்த காலங்களில் அரசியல்வாதிகளுடனும் அரசியல் கட்சிகளுடனும் தொடர்புகளைப் பேணி வந்தனர். அரசியல்வாதிகளும் தமது அரசியல் தேவைகளுக்காக அவர்களைப் பயன்படுத்தியிருந்ததுடன் சட்டத்தை நிலைநாட்டும் தரப்பினர்களால் அவர்களுக்கு ஆபத்து ஏற்படாதும் பாதுகாத்து வந்தனர். எனினும் தற்பொழுது ஆட்சிக்கு வந்துள்ள தேசிய மக்கள் சக்தி அரசு எவருக்கும் அஞ்சாது நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உத்தரவிட்டுள்ள நிலையிலேயே தமது கடந்தகால நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் தற்பொழுது வெளிவந்துவிடும் என்ற அச்சத்தினால் இதுபோன்ற ”சாட்சிகளை அழிக்கும்” படுகொலைகள் இடம்பெறுகின்றன என்பது நிராகரிக்க முடியாத குற்றச்சாட்டாகவேயுள்ளது.